கொரோனாவிலிருந்து இலங்கை தப்புமா?தவறான முகாமைத்துவம் பெரும் அழிவை ஏற்படுத்தும் 

878 Views

இலங்கையில் மூன்றாவது அலையாக கோவிட்-19 தொற்று தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. 24 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் இருந்து நாடு மீண்டு வருமா  என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையின் சுகாதார அமைச்சின் சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதனுடன் ‘இலக்கு’ மேற்கொண்ட நேர்காணலில் அவர் கூறிய கருத்துக்களை இங்கே பகிர்கின்றோம்.

2019 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இந்த கோவிட்-19 தொற்று உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இந் நோயானது அனைத்து நாடுகளிலும் பல இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஆரம்பப் பகுதியில் இந்தத் தொற்று நோய்க்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டக்கூடிய அளவில்  ஆய்வுகள் முன்னேற்றம் கண்டுள்ளன.  அதுவரை நாமே எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளார்கள். முதன்முறையாக இலங்கையில் தொற்று ஏற்பட்ட போது, மக்கள் அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவு அளித்தார்கள். பொதுவாக ஏற்று கடைப்பித்தார்கள். இதனால் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். கோவிட்-19 தொற்றை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்த நாடாக இலங்கை இருந்தது.

122499466 10157281948606949 873213954909238597 o கொரோனாவிலிருந்து இலங்கை தப்புமா?தவறான முகாமைத்துவம் பெரும் அழிவை ஏற்படுத்தும் 

ஆனால் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் காலப்போக்கில் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்ற நிலை காணப்படுகிறது. இது பாரிய அழிவை நோக்கிச் செல்கிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது, கைகளை சுத்தம் செய்வது போன்ற அடிப்படையான செயற்பாடுகளைக்கூட கடைப்பிடிக்காத நிலையில் மக்கள் உள்ளார்கள்.

இதனால் முகக்கவசம் அணியாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வாறான முகக்கவசங்களை அணிய வேண்டும் என்பதில் பலருக்கு  தெளிவில்லை

எவ்வகையான முகக்கவசங்களை அணியலாம்

பொதுமக்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும்  முகக்கவசங்களை அணியலாம்.

122165239 10157281946931949 8013054646526256432 o கொரோனாவிலிருந்து இலங்கை தப்புமா?தவறான முகாமைத்துவம் பெரும் அழிவை ஏற்படுத்தும் 

மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்வோர், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மருத்துவ சிகிச்சை முகக்கவசம் (medical surgical masks) அணியலாம்; அல்லது  N95 / MN95 முகக்கவசங்களை  அணிந்து கொள்ள முடியும். முகக்கவசங்கள் அணிய முதல் கைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

கடதாசி, துணிகளினால் செய்யப்பட்ட முகக்கவசங்கள்  அணிவதன் மூலம் பொலிசாரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே தவிர, நோய்க் கிருமிகளின் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது.

மேலும் சிலர் கறுப்பு நிற முகக்கவசம் அணிகிறர்கள். அது மிகவும் ஆபத்தானது. அழுக்குகள் படியாத முகக்கவசங்கள் அணிய வேண்டும். தொடர்ந்து அழுக்குகள் படியும் முகக்கவசங்களை அணிந்தால்,  கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

சமூக இடைவெளியை பேணுதல்

சமூக இடைவெளியை பேணுவது என்பது  சில சந்தர்ப்பத்தில் முடியாதிருக்கும். அதாவது பொதுப் போக்குவரத்துப் பயணத்தில் சரியாக அதை கடைப்பிடிக்க  முடியாதிருக்கும்.

மேலும் ஒன்றுகூடல்கள், திருவிழாக்கள்,  மரணச் சடங்குகள், திருமணம் என பலவிதமான நிகழ்வுகள் நடைபெறுகிறது.  அங்கு கலந்து கொள்பவர்கள் ஆலோசனைகளை பின்பற்றத் தவறும் பட்சத்தில் நோய் பரவுகிறது.

கை கழுவுதல்  / தமிழர் கலாசாரத்தை பின்பற்றலாம்

கைகளை  கழுவுதல் என்பது வீடுகளில், வேலைத்தளங்களில் உள் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டும். தமிழர் கலாசாரத்தில் அந்த நடைமுறைகள் உள்ளது.  மீண்டும் எமது தமிழ்ச் சமூக பழக்கவழக்கங்களை பின்பற்றினால், நோய்த்தொற்றை  கட்டுப்படுத்தலாம். மேலும் நோய்வாய்ப்படக் கூடிய தன்மை உள்ளவர்கள் வெளியில் செல்வதை  தவிர்த்துக் கொள்ள வேண்டும். முறையான வழிகாட்டல்களை பின்பற்றுவதால் நோய் பரவும் வீதத்தை கட்டுப்படுத்தலாம்.

இறப்பு வீதம் ஏனைய நாடுகளை விட குறைந்த அளவில் உள்ளது. அதைத்  தொடர்ந்து பேண மக்கள் ஒத்துழைக்க வேண்டும். விழிப்புணர்வு நிலையை பேண வேண்டும். அப்போது தான் பாதிப்பை தவிர்த்துக் கொள்ள முடியும்.

உள ரீதியாக பாதிக்கப்படும் நோயாளர்கள்

நோயளர்களை குற்றவாளிகள் போல பார்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். உளவியல் ரீதியான பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது. உளவியல் பாதிப்பு ஏற்படும் என்பதை உணராமல் செய்திகளை வெளியிடுகிறார்கள். பொறுப்பற்ற செய்தி வெளியிடுவதால் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் முறையற்ற முகாமைத்துவம்

கோவிட்-19 தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் அறிவித்தல்கள் தனிச் சிங்கள மொழியில் மட்டும் வழங்கப்படுகிறது. இது ஏனைய மொழி பேசும் மக்களுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, தமிழ் மொழியிலும் அறிவித்தல்கள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

சமூகப் பரவல் ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எவையும் இதுவரை இல்லை. மிக முக்கியமாக வைத்தியசாலைகளில் ICU விடுதிகள் அதிகரிக்கப்படவில்லை. எனவே அதிகளவு தொற்று ஏற்படும் இடத்து மக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாமல் போகும். இந்தச் சந்தர்ப்பத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை உதாரணமாக பார்க்கும் போது. மேல் மாகாணத்தில் 3 நாட்கள் தொடர் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் போடப்படும் என முழுமுட்டாள் தனமாக முன்னரே அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து பலர் ஏனைய மாவட்டங்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்களில் நாளுக்கு நாள் தொற்றாளர்களும் அடையளப்படுத்தப்பட்டு வருகிறர்கள்.  இப்போது மேல் மாகாணத்தில் இருந்து சென்றவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என கூறியுள்ளார்கள். இது எந்தவகையில் நியாயம்?

இதே போன்ற சட்ட விரோத அறிவிப்புகள் மற்றும்  தவறான கோவிட் முகாமைத்துவம் கோவிட் கட்டுப்பாடு என்ற பெயரில் தொடர்ந்து இடம் பெறப்போகும் அராஜகமான காட்டு தர்பார் நிர்வாகத்துக்கு கட்டியம் கூறுகிறது.

உலகெங்கும் கோவிட் அலை ஏற்படும் போது, அதை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடுகள் முழு நாட்டையும் சில வாரங்கள் முழுமையாக அடைத்து வைப்பதன் மூலமே அலையை கட்டுப்படுத்தியிருக்கின்றன.

ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல், ரோமாபுரி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தது போல, இலங்கையில் அலை ஏற்படும் போது மருத்துவர்களின் ஆலோசனையை கேளாது 20ஆவது சட்ட திருத்தத்தில் மூழ்கி இருந்து விட்டு இன்னமும் சரியான உபாயங்களை பின்பற்றாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

இதைவிட கோவிட் நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேத பானத்தை தயாரித்து விட்டதாக இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது. Hydroxy chloroquine என்னும் மலேரியா மருந்தை ஆய்வு ரீதியான ஆதாரம் இல்லாமல் அமெரிக்காவில் பயன்படுத்த அனுமதித்து; பின்னர் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் காரணமாக அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கோரி இருந்தது. இந்த நிலையில் இலங்கையில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்பு ஆயுர்வேத பானத்தை நிறுத்துவார்கள் என்ற கேள்வியும் உள்ளது.

மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கையை அமுல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். இது எந்தவகையில் சாத்தியம் என்பது எம்மால் கூற முடியாது.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கிராம மட்டங்களில் அவை குறைவாக உள்ளது. தொடர்சியாக விழிப்புணர்வு செய்து வருகிறோம். எம்மால் இயன்ற உதவிகளை, ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தவறான அறிவிப்புக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது தான் ஆபத்தில் இருந்து தப்ப முடியும்.

ஆனால் நாட்டில் முறையான சட்டத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி செயற்பட்டால் மாத்திரமே இந்த கோவிட்-19 தொற்றில் இருந்து இலங்கையை காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லை என்றால் வரப்போகும் பெரும் அழிவை தவிர்க்க முடியாது.

Leave a Reply