வேலணை சாட்டிப் பகுதியில் மாவீரர் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி

வேலணை – சாட்டிப் பகுதியில் தமக்கு சொந்தமான காணி என சுட்டிக்காட்டி மாவீரர் நினைவுகூரலை அங்கு நடத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் எனக் கூறப்படுவோரால் பொலிசாரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (20) எடுத்துக் கொள்ளப்பட்டது. இது குறித்த வாதப்பிரதிவாதங்களின் பின் குறித்த அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

தடை செய்யப்பட்ட அமைப்பின் அடையாளங்களையோ அதனுடன் தொடர்புடைய காட்சிப்படுத்தல்களையோ செய்யாது, உயிரிழந்தோரை அவர்களின் உறவுகள் நினைவுகூருவதற்கான அடிப்படை உரிமையை மறுக்க முடியாது எனத் தெரிவித்த ஊர்காவற்றுறை நீதிமன்றம், வேலணை சாட்டிப் பகுதியில் வழமை போன்று நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க முடியும் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.

முன்பதாக, கடந்த நவம்பர் 17ஆம் திகதி, சாட்டி மாவீரர் துயிலும் இல்லக் காணி தமக்குச் சொந்தமானது எனவும், அக்காணியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி காணி உரிமையாளர்கள் எனத் தெரிவிப்பவர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. அம்முறைப்பாட்டின் பிரகாரம்  காவல்துறையினரால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அன்றையதினம் (17ஆம் திகதி) பிரதிவாதி சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள், இந்த வழக்கானது எந்தவொரு சட்டப் பிரிவின் கீழும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதவானின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (20.11.2026) திகதியிடப்பட்டிருந்தது.

அதனடிபடையில், வெள்ளிக்கிழமை (20) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் முறைப்பாட்டாளர்களால் நால்வர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிரதிவாதிகளில் ஒருவரான சுவாமினாதன் பிரகலாதன் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனகரத்தினம் சுகாஷ் மற்றும் பெலினா ஆகியோரின் வழிநடத்தலில், சட்டத்தரணிகளான அஜித்சங்கர், கௌரிதரன், ஸ்ரீராகவன், நிரோஷன், சூரியகாந்த் மற்றும் மதிவதனி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.

இதன் போது பிரதிவாதித் தரப்பு சட்டத்தரணிகள், இறந்த ஆத்மாக்களை நினைவேந்துவதைத் தடை செய்யும் சட்டம் உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லை. இறந்த தமது உறவுகளை நினைவேந்துவது மக்களின் அடிப்படை மனித உரிமையாகும்.

மேலும், இந்த வழக்கானது குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 106 ஆவது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், இவ்விடயம் குறித்த சட்டப் பிரிவின் கீழ் உள்ளடங்காது என சுட்டிக்காட்டியிருந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் அனீபா ரஜீவ், 106ஆவது பிரிவின் கீழ் இவ்வழக்கு பொருந்தாது என்பதையும், உயிரிழந்தோரை அவர்களின் உறவுகள் நினைவுகூருவதற்கான உரிமையை மறுக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், வேலணை சாட்டி பகுதியில் நினைவேந்தலை வழமைபோன்று முன்னெடுக்க முடியும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதிவாதி சுவாமினாதன் பிரகலாதன், கடந்த 17ஆம் திகதி மற்றும் இன்றைய வழக்கு விசாரணைகளில் தமது சார்பில் முன்னிலையாகி வாதாடிய சட்டத்தரணிகள் கனகரத்தினம் சுகாஷ், பெலினா உள்ளிட்ட அனைத்து சட்டத்தரணிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.