காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளுக்கு நவீன தொழில்நுட்பம் உதவும் – மத்திய மாகாண ஆளுநர்

கடந்தகால மோதல்களால்  காணாமல் போனவர்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து, அவர்களது குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், நீதியை உறுதிப்படுத்துவதே காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) பிரதான நோக்கமாகும் என மத்திய மாகாண ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில், மாகாண மற்றும் மாவட்ட மட்ட அரச அதிகாரிகளின் நிர்வாகக் கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் கண்டி மாவட்ட விழிப்புணர்வு நிகழ்வு, நேற்று முன்தினம்  (19) வியாழக்கிழமை கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட  அவர்,

கடந்த 1950 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் நிலவிய மோதல்கள் மற்றும் குறிப்பாக 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற காணாமல் போதல்கள் காரணமாக, தமது பிள்ளைகள் குறித்த தகவல்கள் எதுவுமின்றி பெற்றோரும் உறவினர்களும் இன்றும் மிகுந்த வேதனையுடன் வாழ்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்துரையாற்றிய ஆளுநர், கடந்த காலங்களில் தொழில்நுட்ப வரையறைகள் மற்றும் சாட்சியங்கள் இன்மையால் விசாரணைகள் தோல்வியடைந்த போதிலும், தற்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், எதிர்காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள தேசிய அடையாள அட்டைகளில் ” டி.என்.ஏ.”மற்றும் உயிரியளவியல் தரவுகளை  உள்ளடக்குவதன் மூலமும் சாட்சியங்களை உறுதிப்படுத்துவதை இலகுவாக்க முடியும்  எனவும் மற்றும்  மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஒரு நாடாக சர்வதேச மட்டத்தில் காணப்படும் அர்ப்பணிப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஹர்ஷ சுரங்க வலியுறுத்தினார்.

மேலும், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், இதுவரை முறைப்பாடு செய்யாத குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இவ்வலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்தும் நோக்கில் இவ்விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கண்டி மேலதிக மாவட்ட செயலாளர் லலித் எட்டம்பாவல, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த, கண்டி கங்கவட கோரளை பிரதேச செயலாளர் அமில நவரத்ன உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.