மலையக மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாறு வலியுறுத்தல்

443 Views

412803 மலையக மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்குமாறு வலியுறுத்தல்

கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டு நோயாளர்களை இனங்கண்டு உரிய சிகிச்சையளிக்கப்படுதல் வேண்டும்.   இல்லையேல் நிலைமைகள் மோசமடையக் கூடும் என பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும்   பெருந்தோட்ட மக்கள் கொரோனாவினால்  ஏற்படும்  அனர்த்தங்களை கருத்தில் கொண்டு உரியவாறு சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனாவின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.கொரோனா உயிர்ச் சேதங்களை மட்டுமல்லாது பொருளாதாரம், தொழில்வாய்ப்பு, இயல்பு வாழ்க்கை, சுகாதாரம், மருத்துவம், கல்வி என்று பல துறைகளிலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலை காரணமாக பல நாடுகள் நிலைகுலைந்துள்ளன.பசியும், பட்டினியும் பின்தங்கிய மக்களிடையே தலைவிரித்தாடும் நிலையில் எதிர்காலத்தில் உயிரிழப்புக்கள் மேலும் பன்மடங்கு அதிகரிக்கலாமென்றும் அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் இன்னும் தீவிர கரிசனையை வெளிப்படுத்துவதோடு தேசிய அனர்த்த முகாமைத்துவ குழுவை ஒன்றுகூட்டி சகலரின் ஒத்துழைப்புடனும் இதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இப்போது கொரோனா தீவிரமடைந்துள்ளது. பல தோட்டப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தனிமைப்படுத்தப் பட்டுள்ளோருக்கான உதவிகள் உரியவாறு வழங்கப்படுவதில்லை என்ற கண்டனக் குரல்களும் மேலோங்கியுள்ளன.

இந்நிலை சீர் செய்யப்படுவதோடு அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தோட்டப் பகுதிகளில் பி.சி.ஆர் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் இதனூடாக நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை யளிக்கப்படுதல் வேண்டும். கொரோனா பாடசாலைக் கல்வியை கேள்விக் குறியாக்கியுள்ள நிலையில் இணையவழிக் கற்றலுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.புதிய தொழில்நுட்ப வசதிகளை மலையகத்தினர் தவறாது பெற்றுக் கொள்ள வேண்டும்.

கொரோனா விரைவில் மறைந்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லை. இதனால் நகர்ப்புற தொழில் வாய்ப்புக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்நிலையில் மலையக இளைஞர் யுவதிகள் சுயதொழில் வாய்ப்புடன் தொடர்புடைய விடயங்களில் கூடுதலான அக்கறையை செலுத்துதல் வேண்டும்.

இதன் மூலம் ஸ்திரமான வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.அத்தோடு உழைக்கின்ற போதே சேமிக்கின்ற வழக்கமானது கொரோனா போன்ற பேரிடர் ஏற்படுகின்றபோது வாழ்க்கையை துணிவுடன் முன்கொண்டு செல்வதற்கு ஒரு பலமாக அமையும். அத்தோடு பெருந்தோட்ட மக்கள் கொரோனாவால் ஏற்படும் அனர்த்தங்களை கருத்தில் கொண்டு உரியவாறு சுகாதார வழிமுறைகளை பின்பற்றவும் வேண்டும்” என்றார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply