சர்ச்சைக்குள்ளான சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது

சீனாவின் ‘யுவான் வாங் 5’ (Yuan Wang 5) கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

இந்த கப்பல் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

கடந்த 11 ஆம் திகதி கப்பல் நாட்டை வந்தடையவிருந்த நிலையில் உரிய அனுமதி கிடைக்காததால் கப்பலின் வருகை தாமதமானது. இந்த உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பல் கடந்த ஜூலை 14ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்டது.

இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் என்பது இந்தியாவின்  குற்றச்சாட்டாக உள்ளது. எனவே இந்த கப்பலின் வருகையை தடுக்குமாறு இலங்கையிடம் இந்தியா கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் 2017ஆம் ஆண்டு சீனாவுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.