அமைச்சுகளுக்கான ஐந்து செயலாளர்கள்-ஒரு தூதுவர் நியமனம்

அமைச்சுகளுக்கான ஐந்து செயலாளர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகேவை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பி.ஆர். புஷ்பகுமாரவின் நியமனத்திற்கும், வனவிலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக திருமதி ஆர்.எம்.சி.எம். ஹேரத்தின் நியமனத்துக்கும் நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளராக எம்.கே.எம். சிறிவர்தனவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராக ஆர்.பி.ஏ. விமலவீர ஆகியோரின்  நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், அமைச்சர்களான (கலாநிதி) பந்துல குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, விதுர விக்ரமநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரள, (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜோன் செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.