அனைத்து புலம்பெயர் அமைப்புக்களுடன் கலந்துரையாட தயார்-தலைவர் மனோ கணேசன் கருத்து

129 Views

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புக்களுடனும் உரையாட நான் தயாராக இருக்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று(15) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ரணில் அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்பு குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது.

இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஆனால், புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்திபடுத்த போவதில்லை.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன் சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும்.

இதற்காக கால தாமதம் செய்யாமல், இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்.பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply