‘கிளீன் ஸ்ரீலங்கா’: மக்களின் மனங்களில் உள்ள ஆதார வடுக்களை, ரணங்களை தனிக்க வேண்டும்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் மக்கள் மனதில் உள்ள வடுக்கள் மற்றும் ரணங்களைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் எஸ். சிவகஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான சட்டமென உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறும், அந்த சட்டத்தை முழுயைாக நீக்கக் கோரியும் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராளிகள் நலன்புரிச் சங்கம்  கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கையொப்பத்தைப் பெற்று அதனை போராளிகளின் நலன்புரிச் சங்கத்திடம் கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் சிவகஜன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “கிளீன் ஸ்ரீலங்கா எனப்படுவது தனியே சுத்தம், சுகாதாரம், தெருக்களை சுத்தப்படுத்துகிறோம் என்பதில் மாத்திரம் இந்த அரசின் இலக்குகள் அமைந்துவிடக்கூடாது. அது எப்பொழுதுமே மக்களின் மனங்களில் உள்ள ஆதார வடுக்களை, ரணங்களை தனிப்பதாகவே இருக்க வேண்டும். அதுவும் இந்த நாட்டை தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு செயல்தான்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர , இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்று திரட்டும் வகையில், கிராமங்கள் வரை கிளீன் ஸ்ரீலங்கா சபைகளை அமைக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.