முகாம்களிலுள்ள மலையக தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்; இராதாகிருஷ்ணன்

208 Views

அகதி முகாமிலுள்ள மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை
இந்திய அகதி முகாமிலுள்ள மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி, இந்திய வம்சாவளி மக்களாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வே.இராதாகிருஷ்ணன், அங்குள்ள ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு –

“புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி. மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்.

இலங்கையில் கடந்த 10 வருடங்களாகப் போர் பிரச்சினைகள் இல்லை. மறுவாழ்வுநடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விரும்பிய வடக்கு – கிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது.

இதேவேளை கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையகத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோசனமும் இல்லை. மலையக பகுதியில் மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும். சொந்தக் காணி கிடையாது. எனவே தமிழக முதல்வர் இதனையும் கருத்தில் கொண்டு மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி, இந்திய வம்சாவளி மக்களாகஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசும் இந்திய அரசும் உரிய நடவடிக்கையை இதற்காக மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply