தாய்லாந்தில் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன உய்குர் அகதி உயிரிழப்பு 

Uyghur Refuges தாய்லாந்தில் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன உய்குர் அகதி உயிரிழப்பு 

கடந்த 2014ம் ஆண்டு சீனாவிலிருந்து வெளியேறிய  உய்குர் இன அகதி ஒன்பது ஆண்டுகளாக தாய்லாந்து குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார். இவர் இந்த ஆண்டு தாய்லாந்து தடுப்பு முகாமில் உயிரிழந்த இரண்டாவது உய்குர் அகதியாவார். 

உலக உய்குர் காங்கிரஸ், உய்குர் மனித உரிமைகள் திட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பாங்காக்கில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த Mattohti Mattursun எனும் அகதி கல்லீரல் செயலிழப்பில் உயிரிழந்திருக்கிறார் என அறிய முடிவதாக கூறப்பட்டுள்ளது. இவருக்கு வயது 40.

பல வாரங்களாக கடும் வயிற்று வலி, வாந்தி மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக உய்கூர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவுக்கு செல்ல முயன்ற 350 உய்கூர் அகதிகள் சிறைப்பிடிக்கப்பட்ட போது அதில் ஒருவராக இவரும் இருந்திருக்கிறார். அடுத்த ஆண்டே 170 உய்குர் அகதிகள் துருக்கிக்கு மாற்றப்பட்ட நிலையில், மேலும் 100 அகதிகள் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர், மற்ற சிலர் தாய்லாந்தில் இருக்கின்றனர். சீனாவில் உய்கூர் இன மக்களை கூட்டாக சிறை வைக்கும் சித்திரவதைப் போக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

“தாய்லாந்து அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் அணுகி புகலிடம் கோரிய அப்பாவி மக்களை விடுவிப்பதற்கு முன்னர் இன்னும் எத்தனை மரணங்கள் நிகழப்போகின்றன?” என உய்குர் மனித உரிமை திட்டத்தின் நிர்வாக இயக்குநர் ஓமெர் கானத் தெரிவித்திருக்கிறார்.

அதே சமயம், இதுவரை இந்த அகதியின் மரணத்தை தாய்லாந்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Leave a Reply