சிறுவர் வைத்தியசாலையின் OPD வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள்(OPD) இன்று(19) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் செயற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆனபோதும், பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் G.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனக்கு கிடைக்கப்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.