2024 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 8,746 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவற்றில், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் 1,950 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்தல் தொடர்பில் 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்களை யாசகத்திற்குப் பயன்படுத்துதல் தொடர்பில் 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
அத்துடன், சிறுவர்களை பாலியல் தொழில்களில் ஈடுபடுத்துதல் தொடர்பில் 25 முறைப்பாடுகளும், சிறுவர் திருமணங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும், நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதாக கூறி சிறுவர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் 151 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், 2024 ஆம் ஆண்டில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சிறுவர்கள் தொடர்பில் 18 முறைப்பாடுகளும், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள சிறுவர்கள் தொடர்பில் 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.



