செம்மணி மனிதப் புதைகுழி – இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும். நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் முழுமையடைய வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழியுடன் சம்பந்தப்பட்டவை என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் குற்றங்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இச்செயன்முறை அவசியமாகும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் 18 – 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் பூரண அமர்வின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இப்பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

எமது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில முக்கிய விடயங்கள் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 18 – 20ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் பூரண அமர்வின்போது கவனம் செலுத்தப்பட்டது.

சமூகத்தில் சமத்துவம் மற்றும் நீதியை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் ஆயர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அரசாங்கத்தினால் மன்னாரில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் குறித்து இந்த அமர்வின்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

அதேபோன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தோலிக்க ஆயர் பேரவை ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது. இது மிக நீண்டகாலத் தேவையாக இருந்துவந்த நிலையில், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்யும் இச்சமூகத்துக்கான சம்பள உயர்வு பாராட்டத்தக்கதாகும்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றோம். நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் முழுமையடைய வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழியுடன் சம்பந்தப்பட்டவை என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் குற்றங்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இச்செயன்முறை இன்றியமையாததாகும்.

அதேபோன்று சுமார் மூன்று தசாப்தகாலமாக நீடித்த உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மிக மோசமான மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான கதைகளும், அதற்கு முன்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான கதைகளும் கூறப்படுகின்றன.

மறுபுறம் மணல் அகழ்வு நடவடிக்கைகளினால் மன்னாரில் ஏற்படக்கூடிய மிகத் தீவிரமான சூழலியல் பாதிப்புக்கள் குறித்தும் கத்தோலிக்க ஆயர் பேரவை கவனம் செலுத்தியது.

சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் வெகுவாகக் கவலையடைந்திருப்பதுடன், எரிபொருள் மற்றும் எரிவாயு சார்ந்த ஆய்வுகளுக்காக மன்னாரைச் சூழவுள்ள நிலப்பகுதிகள் அகழப்படுவது குறித்தும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்ட நேர்மறை முயற்சிகளாக இருக்கலாம். எனினும் முறையான சுற்றாடல் மதிப்பீடுகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதும், இவை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் பொறுப்பில் இருப்பவர்களின் கடமையாகும். அதுமாத்திரமன்றி இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக அப்பகுதி மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான முறையான கருத்துக்கணிப்பு நடாத்தப்படவேண்டும்.

மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் அதேவேளை, இத்தகைய செயற்பாடுகளால் மன்னார் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்துக்கும் நீர் வளத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.