தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு-  மறைந்த கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர்

175 Views

119713428 gr5 4909 தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு-  மறைந்த கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இது தொடர்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், “இன்றைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கலைஞர் மு.கருணாநிதியின் படத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த நாள்’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக் கத்தக்க நாளாக இந்த ஓகஸ்ட் 2-ஆம் நாள் இனி வரும் காலங்களில் சிறப்பு பெறவுள்ளது. குடியரசு தலைவரை பொறுத்த வரையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் நலனை முன்னிறுத்தி, வாதாடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பழைமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த சட்டப் பேரவை, கடந்த ஒரு நூற்றாண்டில் பல புதுமையான சட்டங்களை, முன்னோடித் திட்டங்களை உருவாக்கி, சமதர்ம சமூகத்தைப் படைத்திட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.

1919 ஆம் ஆண்டில் ‘மாண்டேகு – செம்ஸ்போர்டு’ சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாளைய மாகாண சட்டப் பேரவைகளில் முதன் முதலில் இடம்பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின்னர் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகள் உருவாவதற்கு வழியமைத்தது. அந்தச் சட்டத்தின்படி, சென்னை மாகாண சட்ட மன்றத்துக்கு 1920 ஆம் ஆண்டு முதன் முதலாகத் தேர்தல் நடந்தது.

அந்தத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. 1921 ஆம் ஆண்டு கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழா நிகழ்வும் அதேபோல 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் முதன் முதலாக 1937-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டமன்றப் பேரவையின் வைரவிழா நிகழ்வும் 1997-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் தலைமையிலான அரசால் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அதே வேளையில், இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு சில சட்டங்களை எடுத்துச் சொல்லவும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு உண்டு. அதோடு, தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சிப் பதவிகளில் உரிய இடஒதுக்கீடு, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம் என மகளிர் நலன் காப்பதில் நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை உருவாக்கித் தந்த பெருமை கொண்டது. அதுமட்டுமல்ல, சென்னை மாநிலத்திற்கு `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தனித் தீர்மானத்தை அண்ணாவின் அரசு நிறை வேற்றியது.

சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தைச் செல்லுபடியாக்கும் சட்டம் வகுத்தது; நிலச் சீர்திருத்தச் சட்டம் உருவாக்கியது; மே தினத்தை அரசு விடுமுறை ஆக்கியது; மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றியது; பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க சட்டம் நிறைவேற்றியது; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது எனப் பல சட்டங்களை தீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை உண்டு.

சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்த மண்டல் ஆணைய அறிக்கையைச் செயல்படுத்த தீர்மானம், தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கக் கோரும் தீர்மானம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் இருந்த இடர்களை நீக்க நுழைவுத் தேர்வை ஒழிக்கும் சட்டம் போன்ற பல்வேறு தீர்மானங் களையும் சட்டங்களையும் இயற்றியவர் கருணாநிதி.

முன்னாள் முதலமைச்சரான அவரது படத்தைப் பார்க்கும் போது, இன்றும் நம் முன்னால் இருந்து வழி நடத்தும் ஒரு முதலமைச்சராக காண்கிறேன். இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்’ என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை, 1921 ஆம் ஆண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply