அவுஸ்திரேலியாவில் அகதிகள் உள்பட 12 பேரின் விசா இரத்து: போராட்டத்திற்கு இடையில் கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு இடமாற்றம் 

அகதிகள் உள்பட 12 பேரின் விசா இரத்து

அகதிகள் உள்பட 12 பேரின் விசா இரத்து

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமிலிருந்த அகதிகள் உள்ளிட்ட 12 பேரை அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு வெளியே உள்ள கிறிஸ்தும்ஸ் தீவுக்கு அவுஸ்திரேலிய அரசு இடமாற்றியிருக்கிறது. இவர்களது விசாக்கள்  அவுஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டம் 501-இன் கீழ் நடத்தை(character) அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப் படை குறிப்பிட்டுள்ளது.

இந்த இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்களை அவுஸ்திரேலிய காவல்துறை கடுமையான முறையில் கையாண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. போராட்டகாரர்களுக்கு எதிராக காவல்துறை மிளகு ஸ்பிரேவை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களில் அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் உள்பட அகதிகள் சிலரும் இடமாற்றப்பட்டுள்ளதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

நடத்தை அடிப்படையில் ஒரு குடியேறியின் விசாவை இரத்து செய்ய அமைச்சருக்கு புலம்பெயர்வு சட்டம் அதிகாரம் வழங்குகிறது. அதே சமயம், அச்சட்டத்தின் கீழ் ஒருவரது விசா இரத்து செய்யப்பட்ட போதிலும் அவர் அவுஸ்திரேலியாவிலேயே இருப்பதற்கான உரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது.

“சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் எனக் கருதப்பட்டு விசாக்கள் இரத்து செய்யப்பட்ட கைதிகள் இடமாற்றப்பட்டிருக்கின்றனர். இதில் தாக்குதல், சட்டவிரோத போதைப் பொருள், கொள்ளை, குடும்ப வன்முறை மற்றும் பிற குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களின் இதில் இடமாற்றப் பட்டிருக்கின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமநிலைப்படுத்தும் வகையில் கைதிகள் முகாம்களுக்கு இடையே இடமாற்றப்படுகின்றனர்,” என அவுஸ்திரேலிய எல்லைப் படை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 2020ல் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமை மீண்டும் திறந்த அவுஸ்திரேலிய அரசு, அங்கு 212 பேரை சிறைப்படுத்தி இருக்கிறது. இதில் 90 பேரின் விசாக்கள் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனால் இரத்து செய்யப்பட்டவையாகும்.

Tamil News