கனேடிய பாராளுமன்றத்தின் இனப்படுகொலை தீர்மானம் வரலாற்று ரீதியில் முக்கியமானது – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்பு

312 Views

கனேடிய பாராளுமன்றத்தின் இனப்படுகொலை தீர்மானம்

கனேடிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தினை வரலாற்று ரீதியில் ஒரு முக்கியமான தீர்மானமாக பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமைச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக கனேடிய பாராளு மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையை பாராளுமன்றம் ஏற்று இனப் படுகொலை என்பதை அங்கீகரித்திருக்கிறது. இதை ஈழத்தமிழர்கள் சார்பாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாகவும் பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் நாங்கள் வரவேற்கிறோம்.

குறித்த இந்த தீர்மானத்திற்காக உழைத்த அத்தனை பேரையும் வாழ்த்துகின்றோம். அவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த தீர்மானத்தோடு மாத்திரம் நின்றுவிடாது ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்படுகின்ற வரை இந்த தீர்மானத்திற்கு பின்னால் இருக்கின்ற அத்தனை பேரும் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்று ஈழத் தமிழினத்தின் சார்பில் நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.

இந்த தீர்மானத்தை நாங்கள் ஒட்டுமொத்தமாக கனேடிய அரசாங்கத்தினுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாக கருத முடியாவிட்டாலும் இது எதிர்கால கனேடிய அரசாங்கத்தினுடைய முடிவுகள் மற்றும் செயற்பாடுகளில் காத்திரமான செல்வாக்கை செலுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அதேநேரம் உலகிலே பல்வேறுபட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இந்த தீர்மானம் ஒரு காத்திரமான செய்தியை சொல்லியிருக்கிறது. இது போன்றதான காத்திரமான நடவடிக்கைகளை தாங்கள் சார்ந்த நாடுகளிலும் அவர்கள் சார்ந்த சட்ட சபைகளிலும் இதற்கான நகர்வுகளையும் முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என்கிற உந்துதலையும் வழங்கியிருக்கிறது.

மேலும் 2009 முதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இனப்படுகொலை சம்மந்தமாகவும் இனப்படுகொலைக்கு உரிய தீர்வுகள் சர்வதேச விசாரணை மூலமாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இதனை தொடர்ச்சியாக ஏளனமாகவும், கேளிக்கைக்குரிய ஒரு விடயமாகவும் பார்த்தது மட்டுமல்லாமல் ஈழத்தில் நடைபெற்றது ஒரு போர்க்குற்றம் என்ற அடிப்படையிலும் இனப்படுகொலை நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்பதுடன் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை கோருவதற்கான வாய்ப்புக்களும் ஆதாரங்களும் அறவே இல்லை என்பதை கூறிவந்த சகல தரப்பினருக்கும் இது ஒரு காத்திரமான செய்தியினைச் சொல்லியிருக்கிறது.

ஆகவே இந்த இடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய இனம் சார்ந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்புக்களையும் ஈழத்தமிழ் மக்களும் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களும் உணர்ந்து கொண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினை பலப்படுத்துவார்கள் என நாம் நம்புகின்றோம்  என்றார்.

Tamil News

Leave a Reply