ஜெனீவாவில் தமிழர்கள் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருக்க முடியுமா? | அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் | நேர்காணல்

தமிழர்கள் நம்பிக்கை

தமிழர்கள் நம்பிக்கைஜெனீவா-தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்க முடியுமா?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கின்றது. அதற்கான தயாரிப்புக்களில் தமிழ் அமைப்புக்களும், இலங்கை அரசாங்கமும் ஏனைய தரப்புக்களும் இறங்கி யிருக்கின்றன. இந்தப் பின்னணியில் ஜெனீவாவை எதிர்கொள்வது தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், ஜெனீவா கூட்டத் தொடர்களில் பங்கு கொண்டவருமான அருட்தந்தை ஜெயபாலன் குருஸ் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த முக்கியமான தகவல்கள்கள்.

கேள்வி:
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கின்றது. போரால் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தொடர்ந்தும் தமக்கான நீதி இதன்மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். அதில் எந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியும்?

பதில்:
பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் நாங்கள் கட்டாயமாக எங்களுடைய உரிமைகளுக்காக போராடித்தான் ஆகவேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குச் செல்லுதல். கடந்த காலங்களில் தனிப்பட்ட முறையில் நான் ஜெனீவாவுக்குச் சென்று வந்திருக்கின்றேன். ஐ.நா. ஒரு சில நியமங்களைக் கடைப்பிடிக்கின்றது. அதை நாம் புரிந்துகொண்டு ஐ.நா.வில் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. நான் அங்கு சென்றேன்; பேசினேன் என்று சொன்னால் மட்டும் போதாது. ஐ.நா.வுக்கென சில சட்டதிட்டங்கள் நியமங்கள் உள்ளன.

அதேவேளையில், ஐ.நா. என்பது நாடுகளின் ஐக்கியம். அதனால் நாடுகளுக்குத்தான் ஐ.நா.வில் அதிகளவுக்கு சந்தர்ப்பம் வழங்குவார்கள். நாம் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாகத்தான் அங்கு செல்ல வேண்டும். ஆனால், அதனைவிட நாடுகளின் பிரதிநிதிகளுக்குத்தான் அங்கு முக்கியத்துவம் இருக்கும்.

கேள்வி:
போர் முடிவுக்கு வந்து 13 வருடங்களின் பின்னரும் ஆக்கபூர்வமாக எதனையும் மனித உரிமைகள் பேரவையால் செய்ய முடியவில்லை என்ற ஒரு கருத்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

பதில்:
நான் முன்னர் சொன்னதுபோல நாடுகளுக்குத்தான் மனித உரிமைகள் பேரவையில் அதிகளவு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது. அதனைவிட, நாடுகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு ஆளணி உள்ளது. இதற்காகவே சிலர் பணி புரிவார்கள். அதனால், அங்கு அவர்கள் பலமாக இருக்கின்றார்கள். எம்மைப் பொறுத்தவரையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக நாம் அங்கு சென்று பணிபுரிந்தாலும் எமது பலம் அங்கு குறைவாகவே இருக்கின்றது. இது பிரதான காரணம்.

கேள்வி:
ஜெனீவாவை எதிர்கொள்வதில் தமிழர் தரப்புக்கள் தெளிவான ஒரு வேலைத் திட்டத்துடன் செயற்படத் தவறிவிட்டன எனக் கருதுகின்றீர்களா?

பதில்:
ஆம். அது உண்மைதான். தாயகத்திலிருந்தும், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பலர் அங்கு செல்கின்றார்கள். அவர்கள் அனைவரும் தமது முயற்சிகளை ஒருங்கிணைந்து முன்னெடுத்தால் அது நன்றாக இருக்கும். ஆனால் அது சாத்தியப் படவில்லை. இது போன்ற காரணங்களால்தான் எமது தரப்பு நியாயங்களை ஐ.நா.வுக்கு ஒற்றுமையாகக் கொண்டு செல்ல முடியாதிருக்கின்றது. அதற்கான முயற்சிகள் தான் இன்று அவசியம்.

கேள்வி:
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஜெனீவாவுக்கான கடிதம் ஒன்றைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கியுள்ளன. இவ்வாறு பல கடிதங்கள் தனித் தனியாக ஜெனீவாவுக்கு அனுப்பப்படுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:
கடந்த வருடம் நான் உட்பட மன்னாரைச் சேர்ந்த சிலர் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்து இவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுத்தோம். இனப்படுகொலை போன்ற விடயங்களில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து இவ்வாறான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தோம். அந்த முயற்சியை ஒரு வெற்றி எனச் சொல்லலாம். ஏனெனில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கட்சிகள் அனைத்தும் இணைந்து இவ்வாறான கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதில் அர்த்தம் உள்ளது. அவ்வாறான கடிதத்துக்கு ஒரு வல்லமை உள்ளது.

ஆனால், அதற்குப் பிற்பாடு இவ்வாறு தொடர்ந்தும் செயற்படுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஒன்றிணைந்து செயற்பட முடியாமல் போனமை ஒரு தூரதிஷ்டமானதுதான்.

கேள்வி:
இப்போது 49 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ்வாறு தமிழத் தேசியக் கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகள் ஏதாவது உங்களால் முன்னெடுக்கப் படுகின்றதா?

பதில்:
இவ்வாறான முயற்சியில் சிலர் ஏற்கனவே இறங்கியிருந்தார்கள். ஆனால், அது வெற்றி பெறவில்லை.

கேள்வி:
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நட்டஈடுகளை வழங்குவது, அபிவிருத்தி என்பவற்றின் மூலமாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடனிருப்பதாகத் தெரிகின்றது. இது சாத்தியமானதா? பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை எவ்வாறுள்ளது?

பதில்:
நிச்சயமாக அரசு அவ்வாறுதான் செயற்படுகின்றது. போர் முடிந்து 13 வருடங்கள் சென்றுவிட்ட இந்த நிலையில், அபிவிருத்தி முக்கியமானதுதான். ஆனால், எமது மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்றால், எமக்கு நீதி வேண்டும். உண்மையை அறிய வேண்டும். அதற்குப் பின்னர் நாம் இணைந்து இந்த அபிவிருத்தியில் ஈடுபடலாம் என்பதைத்தான் எமது மக்கள் கேட்கின்றார்கள்.

உண்மையையும் நீதியையும் அரசு தட்டிக்கழித்துக் கொண்டு செல்கின்றது. கடந்த காலத்தைப் பற்றிப் பார்க்க வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி – அபிவிருத்தியைப் பற்றிப் பாருங்கள் என்றுதான் அரசியல்வாதிகள் சொல்கின்றார்கள். ஆனால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. உண்மை தெரியாமல் நாம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

அதேவேளையில், இவ்வாறான போராட்டங்களின் மூலமாக எதுவும் கிடைக்கப் போவதில்லை என நம்பிக்கையிழந்த சிலர் இவ்வாறு நட்டஈடு குறித்து சிந்திக்கத் தலைப்படலாம்.

கேள்வி:
இது தொடர்பில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு எவ்வாறானதாக உள்ளது?

பதில்:
ஒரு சில நாடுகள் இதனைப் புரிந்துகொண்டு – மனித உரிமைகள், உண்மைகளை அறிதல், நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சில நாடுகள், இலங்கையைத் தமக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக இலங்கை என்ன சொன்னாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. அதனால், சர்வதேச சமூகம் எனக் கூறும் போது அனைத்து நாடுகளையும் ஒரேவிதமாகப் பார்க்க முடியாது. அங்கும் வித்தியாசங்கள் உள்ளன.

கேள்வி:
அடுத்த வாரம் ஆரம்பமாகப் போகும் 49 ஆவது கூட்டத் தொடருக்கான தயாரிப்புக்களில் நீங்கள் எந்த வகையில் ஈடுபட்டிருக்கின்றீர்கள்?

பதில்:
விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஒரு சிலர் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார்கள். எமது நீதி, சுயநிர்ணய உரிமை போன்றவை குறித்து அங்கு போய் உரையாற்ற வேண்டும். இந்த பெருந்தொற்று காரணமாக பலராலும் அங்கு செல்ல முடியாதுள்ளது. இருந்த போதிலும் இங்கிருந்தும், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பலர் அங்கு செல்கின்றார்கள். அந்த வகையில் இதில் நானும் பங்களிப்பு செய்யலாம் என நினைக்கின்றேன்.

கேள்வி:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. இதற்கான அரசின் மாற்றுத் திட்டமும் வெளியாகியுள்ளது. ஜெனிவாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் எதிர் கொள்வதற்கான ஒரு உத்தியாகவே இதுவும் கருதப்படுகின்றது. இந்தத் திருத்தங்கள் மூலமாக, அழுத்தங்களை இலங்கை அரசினால் வெற்றிபெற முடியுமா?

பதில்:
அரசாங்கம் செய்கின்ற மாற்றங்கள் – சர்வதேசத்தை திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒன்றாகவே உள்ளது. இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக அரசாங்கம் நீக்க வேண்டும். இதுதான் எமது கோரிக்கை. தென்னிலங்கையிலும் இவ்வாறான கோரிக்கைதான் முன்வைக்கப்படுகின்றது. ஏனெனில் தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் ஏனைய சிறுபான்மையின மக்களையும் தாக்கியது. இப்போது மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்களவர்களையும் தாக்குகின்றது. அதனால், இதனை முற்றாக நீக்க வேண்டும் எனக் கோரப்படுகின்றது.

இதற்கு மாற்றாக அரசாங்கம் கொண்டுவரும் திருத்தத்தை ஏற்கமுடியாது. இந்த அலங்கார திருத்தங்களை நாங்கள் எதிர்க்கின்றோம். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளையும் நாம் முன்னெடுக்கின்றோம்.

Tamil News