முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (Sri Lankans Airlines) நிறுவனத்தின் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஏற்கனவே கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த கொள்முதல் ஒப்பந்தத்தின் போது பாரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அந்த நிதி அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில் இந்த விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



