மீனவர்களை மோத விடும் போக்கை இரு நாட்டு அரசுகளும் நிறுத்த வேண்டும்- தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

மீனவர்களை மோத விடும் போக்கை

சிங்கள இனவாத அரசும் இந்திய அரசும், ஈழத்தமிழ் மற்றும் தமிழக மீனவர்களை மோத விடும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்க தலைவர் ஜெ.கோசுமணி வலியுறுத்தியுள்ளார்.

“சமீப காலங்களாக ஈழத் தமிழ் மீனவர்களை வைத்து இனவாத அரசின் அமைச்சராக இருக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து தமிழ் மீனவர்களை மோதவிடும் போக்கை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஈழத் தமிழ் மீனவர்கள் மீது, தமிழக மீனவர்கள் படகு மோதி இரண்டு மீனவர்கள் இறந்ததாக சொல்லப்படுகிறது, இதை ஒட்டி இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழ் மற்றும் தமிழக மீனவர்களை மோதவிடும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இரு நாட்டிற்கும் பகை ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டு மீனவர்களையும் மோதவிடும் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.   இந்த செய்கை என்பது இரண்டு நாட்டு அரசுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்  மீனவ சமூக மக்களை இனத்தின் பெயரால் அழிக்க நினைப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவர்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வை எட்டுவதற்கான ஒரு முயற்சியை எடுக்க வேண்டுகிறேன். அதேபோன்று தமிழக மீனவர்கள் முடிந்தவரை இலங்கை கடற்பகுதியில் சென்று மீன்பிடிக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.  எதிர்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு நாம் வரவேண்டும், இவ்வாறான மோல் போக்கால் பாதிக்கப்படுவது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மீனவர்களும் இந்திய தமிழ் மீனவர்களும் தான்.

எனவே இரு நாட்டு அரசு இதில் தலையிட்டு ஒரு நிரந்தர மீன்பிடிப்பு முறையில் ஒரு சட்டபூர்வமான வழிவகையை ஏற்படுத்த வேண்டும்” என இலக்கு ஊடகத்திற்கு கருத்து  தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News