பெரும் எண்ணிக்கையானோர் அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டதால் எல்லைப் பகுதியில் பரபரப்பு

மெக்ஸிக்கோ – அமெரிக்கா நுழைவாயிலைக் கடந்து பெரும் எண்ணிக்கையானோர் நேற்று அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டதால் எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிறு நண்பகல் சுமார் 1,000 பேர் மெக்ஸிகோவின் சியுடாட் ஜூவாரெஸ் நகரையும், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் எல் பசோ நகரையும் இணைக்கும் பாலத்தின் அருகில் திரண்டிருந்தனர்.

அதனால், மெக்ஸிகோ படையினர் தடுப்புகளை ஏற்படுத்தி, குடியேற்றவாசிகளை இடைமறித்தனர்.

இதேவேளை, அமெரிக்காவின் தேசிய எல்லைக் காவல் படையினரும் நுழைவாயிலை அடையும் பகுதிகளை முட்கம்பிகள், வாகனங்கள் மூலம் அடைத்தனர். எல் பசோ நுழைவாயில் ஊடான போக்குவரத்தும் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டது.

பெண்கள், சிறார்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் மேற்படி பாலத்தை நோக்கி ஓடிச்செல்லும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

மேற்படி குடியேற்றவாசிகளில் பெரும்பாலானோர் வெனிசூலாவை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் சுமார் 2 லட்சம் பேர் மெக்ஸிகோவிலிருந்து எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முற்படுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.