டொலா் பெறுமதி வீழ்ச்சியின் பின்னணியில் நடந்தது என்ன?-கலாநிதி ஜனகன் விநாயகமூா்த்தி செவ்வி

இலங்கையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சி, சா்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை போன்ற விடயங்கள் தொடா்பாக பொருளாதார – அரசியல் ஆய்வாளா் கலாநிதி ஜனகன் விநாயகமூா்த்தி உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்கு வழங்கிய நோ்காணலின் முக்கியமான பகுதிகளை “இலக்கு” வாசகா்களுக்காக தருகின்றோம்.

கேள்வி – இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதி அண்மைக்காலமாக குறைவடைந்துவருகின்றது. இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்துவருவதன் பிரதிபலிப்புத்தான் இது எனக் கருத முடியுமா?

பதில் – இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுதி அண்மைக்காலத்தில் வீழ்ச்சியநை்து வருவதற்கு இலங்கையின் பொருளாதாரம் வளா்ச்சியடைந்துவருகின்றது என்ற கருத்தை ஏற்கமுடியாது. ஏனெனில், இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. சில வாரங்களுக்கு முன்னா் அமெரிக்காவில் உள்ள சா்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், இலங்கையிலுள்ள மூன்று வங்கிகளுக்கு 400 பில்லியன் டொலா்களை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளாா்கள். அந்தத் தொகை இலங்கைக்கு வருகின்ற போது ஏற்படும் மாற்றமாக இதனைப் பாா்க்கலாம். அதனைவிட மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கையின்படி, நாணய மாற்றை நிா்ணயிக்கின்ற பேஸ் பொயின்ற் அதிகரித்திருக்கின்றாா்கள். இந்த இரண்டு காரணங்களினாலும்தான் டொலரின் பெறுதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே தவிர, இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய வளா்ச்சி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

அதாவது வா்த்தக ரீதியாக – சந்தை ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படவில்லை. மாறாக, மேலதிகமாக டொலா் வருவதன் மூலமாக இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதனைவிட சா்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியும் கிடைக்கும் என்ற நிலையில் ஒரு தளம்பல் கணப்படுகின்றது.

கேள்வி –  சா்வதேச நாயண நிதியத்துடனான உடன்படிக்கை இம்மாத இறுதியில் கைச்சாத்திடப்படலாம் என அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு இந்த உடன்படிக்கை எந்தளவுக்கு உதவும்?

பதில் – இது தொடா்பில் பல்வேறுவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இங்கு “பிணை எடுத்தல்” என்ற கருத்து கூட அரசியல் கலந்த ஒரு சொல்லாடலாகவே உள்ளது.  உதாரணமாக நீங்கள் வங்கி ஒன்றிலிருந்து இரண்டு கோடி ரூபாவைப் பெற்றிருந்த நிலையில், அதனை மீளச் செலுத்த முடியாத வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டால், இன்னொரு நிறுவனம் அந்த இரண்டு கோடியை உங்களுக்கு வழங்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட வங்கி – வேறொரு கால அட்டவணைப்படி இந்தக் கடன்களை நீங்கள் வழங்கலாம் என மற்றொரு உடன்படிக்கைக்கு வரவேண்டும். இதனைத்தான் “பிணையெடுத்தல்” என்று சொல்கின்றோம். அதாவது, இந்த இரண்டு விடயங்களும் நடந்தால் இலங்கையை நிச்சயமாக “பிணையெடுக்க” முடியும்.

இந்த நிலையில் இன்று இலங்கையின் வெளிவாரிக் கடன் 35 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்படுகின்றது. அதனைவிட குறிப்பிட்ட சில நாடுகளிடமிருந்து பெறப்பட்டது 10.8 பில்லியன் அமெரிக்க டொலராகும்.  இந்தத் தொகைய மற்றொரு நிறுவனமோ நாடோ வழங்கினால்தான் உண்மையில் பிணையெடுக்க முடியும். ஆனால், சா்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலரைத்தான் கடனாகக்கொடுப்பதற்கு முன்வந்திருக்கின்றாா்கள். இது மொத்த கடன்தொகையில் பத்து வீதம்கூட இல்லை. ஆக, இதன்மூலமாக இலங்கை மீண்டும் வழமையான ஒரு நிலைக்கு வந்துவிடும் எனக் கருதுவது தவறானதாகும்.

இதனைவிட, இந்த ஐ.எம்.எப். கடனைப் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு விதமான மாற்றங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். வரிச் சீா்திருத்தம், மின்வாரக் கட்டண உயா்வு, வட்டி வீத அதிகரிப்பு என பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுதான் ஐ.எம்.எப். கடன்களுக்கான உத்தரவாதத்தை நாம் வழங்கியிருக்கின்றோம். ஆனால், இவற்றையெல்லாம் அரசாங்கம் தொடா்ச்சியாகச் செய்ய முடியுமா என்ற கேள்வி ஏற்படுகின்றது.

இலங்கை விடயங்களில் ஐ.எம்.எப். அக்கறையுடன் செயற்படுகின்றது என்பதை உலகத்துக்குக் காட்டுவதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்தக் கடன்களை அவா்கள் வழங்குகின்றாா்கள். இதற்காக அரசாங்கம் செய்யவேண்டியற்றுக்கு தடை ஏற்பட்டால் அரசியலில் ஒரு ஸ்திரமற்ற நிலை உருவாகும். அவ்வாறான ஒரு நிலைமை உருவானால், இந்த ஒத்துழைப்பிலிருந்து ஐ.எம்.எப். பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், ஏனைய கடன் வழங்குநா்களும் பின்வாங்கும் ஒரு நிலை ஏற்படும்.

இந்த இடத்தில்தான் ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளை நிறைவேற்றும் போது ஏற்படக்கூடிய நெருக்குவாரங்களைத் தாங்கி நிற்கக்கூடியளவுக்கு மக்கள் தயாராக இருக்கின்றாா்களா என்ற கேள்வி தொக்கிநிற்கின்றது.

கேள்வி –  ஐ.எம்.எப். முன்வைத்துள்ள நிபந்தனைகள் எவ்வாறான தாக்கங்களை நாட்டின் அரசியலில் ஏற்படுத்தப்போகின்றது?

பதில் – பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது. இலங்கை ஒரு குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களைக்கொண்ட நாடு. 70 வீதமான மக்கள் குறைந்தளவு வருமானத்தைக் கொண்டவா்களாகவே உள்ளனா். இந்த நிலையில் அவா்களுடைய அன்றாடச் செலவுகள் பாரியளவில் அதிகரிக்கும்போது, மக்கள் இயல்வுநிலைக்கு மாறாகச் செயற்படும் நிலைதான் உருவாகும். அது அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும்.  அதிலும் முக்கியமாக தற்போதைய அரசாங்கம் ஒரு ஸ்திரமான அரசாங்கமாக இல்லாத காரணத்தினால், மக்கள் மத்தியில் சென்று அழுத்தங்களைக் கொடுத்து செயற்படுத்துமா என்பது கேள்விக்குறிதான். பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவா்களையும் இதில் பங்காளிகளாக மாற்றும் தேவை ஒன்றுள்ளது.  அவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை என்பதுதான் எனது கணிப்பு.

அதனால், இவ்வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் இந்த நாடு பெருமளவிலான அரசியல், பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எதிா்பாா்க்கலாம்.

கேள்வி – அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை கொந்தளிப்பான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வரிக்கை கொள்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

பதில் – அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரிகள் மீண்டும் பல்வேறு முறைகளில் மக்களைச் சென்றடைய வேண்டும். இதுதான் ஜனநாயக ரீதியான வரிக்கொள்கை. இந்த வரிக் கொள்கையைத்தான் மேற்குலக நாடுகள் பின்பற்றுகின்றன. மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் ஒரு வரி செலுத்தப்படுவதென்பது ஒரு சேமிப்பாகக் கருதப்படுகின்றது. அங்கு அவா்கள் விருப்பத்துடனயே வரியைச் செலுத்துவாா்கள். ஏனென்றால், அவா்களுக்குத் தெரியும். இந்த வரி பின்னா் தமக்கு மீண்டும் கிடைக்கும் – பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்று.

இலங்கையைப் பொறுத்தவரையில் அறவிடப்படும் வரிகளை எவ்வாறு பயன்படுததப்போகின்றாா்கள் என்பதில் ஒரு திட்டம் இல்லை.  அதற்கான ஒரு முறைமையை உருவாக்கி, அதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி – அதன் பின்னா் வரிகளை அறவிடுவதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. அதாவது, மக்களிடம் அறவிடப்படும் வரியானது மீண்டும் எவ்வாறு மக்களிடம் சென்றடைகன்றது என்பதற்கான ஒரு முறைமையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

கேள்வி – இந்திய ரூபாவை இலங்கையில் புழக்கத்தில் விடுவது, இரு தரப்பு பரிமாற்றத்துக்குப் பயன்படுத்துவது போன்ற பல விடயங்கள் பேசப்படுகின்றது. அதற்கான வாய்ப்பு உள்ளதா?

பதில் – சில நாடுகளில் இவ்வாறான நடைமுறை இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையிலும் இது புதிதான ஒரு விடயமல்ல. இலங்கையில் இது எந்தளவுக்கு சாத்தியமானது என்பது தெரியவில்லை. ஏனெனில் வரும் காலங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இதன்போது இந்திய ரூபாவை நேரடியாகப் பயன்படுத்துவதற்கான ஒரு மாா்க்கம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு நடைபெற்றால், சீனாவும் தன்னுடைய நாணயத்தையும் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கேட்கலாம்.  டொலரைப் பயன்படுத்தும் போது அது ஒரு சா்வதேச அலகாகக் காணப்படும். ஆனால், இந்திய ரூபாவை பயன்படுத்தும் போது – நாளை சீனாவின் நாணயத்தையும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதனால் என்னைப் பொறுத்தவரையில் அதற்கான வாய்ப்பு இலங்கையில் இல்லை என்றுதான் சொல்வேன்.