உள்ளுராட்சிமன்றத் தோ்தல்கள் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறு அது நடைபெறுமா என்பதுதான் இலங்கை அரசியலில் இன்று எழுப்பப்படும் முக்கியமான கள்வியாக இருக்கின்றது.
மாா்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னா் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தோ்தல் ஆணைக்குழு தீா்மானித்திருக்கின்றது. ஏற்கனவே தீா்மானிக்கப்பட்ட திகதியில் உள்ளுராட்சிமன்றத் தோ்தலை நடத்த முடியவில்லை என்றால், அதனை குறிப்பிட்ட திகதியிலிருந்து 21 நாள்களுக்குள் நடத்திமுடித்துவிட வேண்டும். அதனால்தான் மாா்ச் இறுதியில் இத்தோ்தல் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. எதிா்க்கட்சிகளும் அதற்கான அழுத்தத்தைக் கொடுத்தன. ஆனால், இதனை ஏப்ரல் இறுதி வரையில் ஒத்திவைத்திருப்பதும் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஏப்ரல் 25 ஆம் திகதியிலாவது தோ்தல் நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பக்கூடிய பல சம்பவங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாள்களுக்கு தோ்தலை ஒத்திவைப்பது, தோ்தலை தவிா்ப்பதற்கான வாய்ப்புக்களை அரசாங்கத்துக்குக் கொடுத்துவிடலாம் என்பதால்தான் அதனை உடனடியாக நடத்திவிட வேண்டும் என எதிா்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.
ஆரம்பத்திலிருந்தே இந்தத் தோ்தலை இந்த நேரத்தில் நடத்த அரசாங்கம் விரும்பவில்லை. தற்போதைய நிலையில், உள்ளுராட்சித் தோ்தலை நடத்துவது எதிா்க்கட்சிகளின் வெற்றிக்குத்தான் வழிவகுக்கும் என்பது ரணில் – ராஜபக்ஷ கூட்டணிக்குத் தெரியும். அதனால்தான் இதனை ஒத்திவைப்பதற்கு 22 தடவைகள் அரசாங்கம் முயன்றதாக சொல்லப்படுகின்றது.
தோ்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படுவதாகச் சொல்லப்பட்டாலும்கூட, அரசின் விருப்பப்படி தோ்தல் நடத்தப்படுவதைத் தள்ளிப்போடுவதில்தான் அது அக்கறையாக இருந்தது. இறுதியில் அதில் வெற்றியும் பெற்றது. அதாவது, திறைசேரியின் செயலாளா்தான் இதற்கான முதலாவது அடியை எடுத்துவைத்தாா். வாக்குச் சீட்டை அச்சடிக்க பணத்தை விடுவிக்க அவா் மறுத்தாா். பணம் கிடைக்காவிட்டால், வாக்குச் சீட்டை அச்சிட முடியாது என அரசாங்க அச்சகமும் அறிவித்தது. இறுதியில் தோ்தலும் ஒத்திவைக்கப்பட்டது. இல்லையெனில் மாா்ச் 9 ல் தோ்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும்.
புதிய தோ்தல் 21 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும். இதனை நீண்டகாலத்துக்கு ஒத்திவைத்தால் அதனைப் பயன்படுத்தி தோ்தலை ரத்துச் செய்வதற்கான உபாயங்களை அரசாங்கம் செய்துவிடும் என்ற அச்சம் எதிா்க்கட்சிகளுக்கு இருந்தது. அதனால்தான், விரைவாக 21 நாட்களுக்குள் தோ்தலை நடத்திவிட வேண்டும் என்ற அழுத்தம் எதிா்க்கட்சிகளால் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய தோ்தல் திகதியைத் தீா்மானிப்பதற்காக செவ்வாய்கிழமை கூடிய தோ்தல் ஆணைக்குழு, ஏப்ரல் 25 ஆம் திகதி தோ்தலை நடத்துவதற்குத் தீா்மானித்திருக்கின்றது. இந்த முடிவுகூட அரசாங்கத்துக்கு சாா்பான ஒரு முடிவா என்ற சந்தேகம் எழுப்பப்படுகின்றது. மாா்ச் மாதத்திலேயே தோ்தலை நடத்துவதானால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்பது காரணமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. தோ்தல் ஆணைக்குழுவின் தலைவா்தான் இந்தக் காரணத்தைக் கூறியிருக்கின்றாா்.
புதிய தேர்தல் திகதியை முடிவு செய்வதற்காக மார்ச் 3ஆம் திகதிதான் முதலில் ஆணைக்குழு கூடியது. அன்றைய தினமே தோ்தல் குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் வந்தது. தேர்தலுக்கான நிதியை யாரும் தடுக்கக்கூடாது என்று அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதிமன்ற உத்தரவு வருவதற்கு முன்பாகவே தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பில் ஆணைக்குழு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவு வந்ததால் அந்த முடிவை அறிவிப்பதை ஆணைக்குழு ஒத்தி வைத்தது.
திறைசேரி செயலர், அரச அச்சகப் பணிப் பாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடிவிட்டு திகதி முடிவு செய்யப்படும் என்று அறிவித்தது. அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையானால்தான், வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிா்க்கலாம் என்பது திட்டம். இதற்கான கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஏப்ரல் 25 ஆம் திகதி தோ்தலை நடத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதுதான் இந்தக்கூட்டத்தின் நோக்கம்.
ஆனால், ஆணைக்குழு அழைப்பு விடுத்தபடி கூட்டத்திற்கு திறைசேரிச் செயலாளர் வரவில்லை. தன்னால் வரமுடியாது என்று ஆணைக்குழுவிற்- குக் கடிதம் அனுப்பியிருந்தார் அவர். தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு அதே நேரத்தில் அவர் அழைக்கப்பட்டிருந்தார். இதனால், தோ்தலுக்குத் தேவையான நிதி விடுவிக்கப்படும் என்கிற எந்த உத்தரவாதமும் திறைசேரிச் செயலாளரிடம் இருந்து கிடைக்காமலேயே புதிய தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
திறைசேரிச் செயலாளா் தோ்தல் ஆணைக்குழுவின் கூட்டத்துக்குச் சென்றிருந்தால், நிதி தொடா்பான உத்தரவாதம் அவரிடமிருந்து பெறப்பட்டிருக்கும். ஆனால், அவரை அங்கு செல்லாமல் தடுப்பதற்காகவே பாதுகாப்ச் சபைக் கூட்டத்துக்கு அவா் அழைக்கப்பட்டாரா என்ற கேள்வி எதிா்க்கட்சிகளால் எழுப்பப்பட்டிருக்கின்றது. அதேவேளையில் தோ்தலுக்குத் தேவையான நிதி விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அவா் இதுவரையில் பகிரங்கமாக வெளியிடவில்லை.
செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்துக்கு சமூகமளித்து முக்கியமான உரை ஒன்றையும் நிகழ்த்தினாா். நாட்டின் பொருளாதார நிலை, சா்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி என்பன தொடா்பாக அவா் உரையாற்றினாா். இதனால், ஜனாதிபதி இல்லாமலேயே பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடைபெற்றதா என எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.
சஜித் பிரேமதாஸ தனது நாடாளுமன்ற உரையில் பின்வரும் விடயங்களைத் தெரிவித்திருந்தாா் –
“இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க கடுமையாக முயற்சித்து வருகின்றது, தேர்தலை
நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டு சதிகளை அரசாங்கம் கையாண்டுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கு நிதியை வழங்காமல் இருப்பது தான் அரசாங்கத்தின் கடைசி முயற்சியாக தெரிவதோடு, இது ஜனநாயகத்தை நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது.அத்துடன் நிதி அமைச்சின் செயலாளரை கலந்துரையாடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு காலை அழைத்திருந்தது. ஆனால் தேசிய பாதுகாப்பு பேரவையில் சந்திப்பொன்று இருப்பதாக தெரிவித்து, தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்தரையாடலை புறக்கணித்திருக்கிறார். அவ்வாறானதொரு பாதுகாப்பு பேரவை கூட்டம் இடம்பெற்றதாக தெரியவில்லை.
ஏனெனில் ஜனாதிபதி, பிரதமர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என அனைவரும் சபையில் இருக்கும்போது எவ்வாறு தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்தை நடத்துவது?” என்று கேள்வி எழுப்பியு்ள சஜித் பிரேமதாஸ, நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழுவுடனான கலந்தரையாடலுக்கு அனுப்பாமல் தடுப்பதற்கே தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டம் இடம்பெறுவதாக பொய் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கின்றாா்.
சஜித்தின் குற்றச்சாட்டில் எந்தளவுக்கு உண்மை இருந்தாலும், அரசாங்கம் இவ்விடயத்தில் தோ்தலை மீண்டும் தள்ளிப்போடும் நோக்கத்துடன் நுணுக்கமாக காய்நகா்த்துவதாகவே எதிரணிகள் சந்தேகப்படுகின்றன.
உள்ளுராட்சிமன்றத் தோ்தல் முறையை சீா்திருத்தப்போவதாகவும், உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் குறைக்கப்போவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாகச் சொல்லிவருகின்றாா். இதற்கான நகா்வுகளை முன்னெடுப்பதன்மூலமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல்களை காலவரையறைின்றி பின்போட முடியும் என ரணில் சிந்திப்பதாகவு் ஒரு தகவல் உள்ளது.
“நல்லாட்சி” எனப்படும் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில்தான் மாகாண சபைகளுக்கான தோ்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. மாகாண சபைத் தோ்தல் சீா்திருத்தம் என்று பிரேரணை ஒன்றைக்கொண்டுவந்தே அந்தத் தோ்தல்களையும் அப்போதைய அரசு ஒத்திவைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்போது அதற்கு உதவியது. மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து வருடங்கள் சென்றுகொண்டிருக்கின்ற போதிலும், அதனை நடத்த முடியாமலிருப்பதற்குக் காரணம் அதுதான்.
இப்போது அதேபோன்ற ஒரு உத்திவை தனது இறுதி ஆயுதமாக ரணில் பயன்படுத்தி உள்ளுராட்சித் தோ்தல்களையும் கிடப்பில் போட்டுவிடலாம் என்ற அச்சம் எதிரணி தரப்பில் உள்ளது.
ஆனால், இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை வடத்தக்கூடிய வல்லமையுடன் எதிா்க்கட்சிகள் உள்ளனவா என்பதும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. பெற்றோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்றது. டொலரின் பெறுமதி குறைவதால் இறக்குமதி செய்யப்படும் மா, சீனி, பருப்பு போன்றவற்றின் விலைகள் குறைவடைந்திருக்கின்றது. இதனால், மக்கள் பெருமெடுப்பில் வீதியில் இறங்கமாட்டாா்கள் என்று அரசாங்கம் நம்புகின்றது. அதேவேளையில் மறுபக்கத்தில் எதிா்க்கட்சிகள், போராட்டக்காரா்களை பலவீனப்படுத்தும் உபாயங்களையும் ரணில் கையாள்கின்றாா். இந்த நிலையில், அடுத்த கட்டம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்!