வங்கதேசம்: ரோஹிங்கியா அகதிகளுக்கான மனிதாபிமான உதவி குறைப்பு

நிதி பற்றாக்குறை காரணமாக வங்கதேச அகதி முகாம்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கான உணவு  உதவியினை உலக உணவு திட்டம் குறைத்திருக்கிறது. 

ரோஹிங்கியா அகதிகளுக்கான ரேஷன் உதவிகளை குறைத்திருப்பது அகதிகள் உணவு உட்கொள்ளலை வெகுவாக பாதிக்கும் என்றும் உலகளவில் மனிதாபிமான தரநிலைக்கு கீழே அகதிகளின் உணவு உட்கொள்ளல் அளவு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் குளியல் சோப்புகள் வழங்கப்படுவதை குறைத்துள்ளமை சுகாதார மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் 2023ல் உணவு உதவி குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2023க்கு முன்பே 10 அகதி குடும்பங்களில் 4 குடும்பங்கள் போதிய உணவினை உண்ணவில்லை என்றும் 12 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

முகாம்களில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டால், வங்காள விரிகுடா கடல்பகுதி வழியாக மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு புலம்பெயரும் எண்ணத்தினை கொண்டிருப்பதை சில அகதிகள் அண்மையில் வெளிப்படுத்தியதாக மனிதாபிமான முகமைகளின் தரவு தெரிவிக்கிறது என NGO Platform செய்திக்குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.

இதனால் மனித கடத்தல் போன்ற ஆபத்தில் ரோஹிங்கியா அகதிகள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒரு முகாமிலிருந்த கிடைத்த ஆராய்வின் படி, சிலர் மாத சம்பளத்துக்காக ஆயுத குழுக்களில் சேரும் எண்ணத்தில் உள்ளதாகவும் NGO Platform செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.