அவுஸ்திரேலியாவில் புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் தேவை 

அவுஸ்திரேலியாவில் நிலவிவரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக நிரந்தர புலம்பெயர்வுக்கான இடங்களை அதிகரிப்பதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், சுரண்டல் மற்றும் மோசடிக்கு உள்ளாகும் புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான வலுவான நடவடிக்கைகள் தேவை எனக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. 

அண்மையில், அவுஸ்திரேலியாவில் ஆட்சி அமைத்த தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கம் 2022-23 நிதியாண்டுக்கான நிரந்தர புலம்பெயர்வு விசாக்களின் எண்ணிக்கையை 160,000 யிலிருந்து 195,000 ஆக உயர்த்தியது.

இதனை பல தொழிற்சங்கங்கள் மற்றும் வணிக அமைப்புகள் வரவேற்றுள்ள போதிலும் புலம்பெயர்ந்தவர்களின் தரப்பிலிருந்து கூடுதலான ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறது.

மெல்பேர்ன் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மையத்தை வழிநடத்தும் மேட் குன்கெல், “தற்காலிக விசா வாசிகளே இன்னும் தொடர்ந்து உழைப்புச் சக்தியின் பெரும் அங்கமாக இருக்கப் போகிறார்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

“எங்களின் புள்ளிவிவரங்கள் படி, தற்காலிக விசாவில் உள்ள மூன்றில் இருவர் பணியிடத்தில் ஏதோ ஒருவகையிலான சிரமத்தை எதிர்கொள்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக, பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் (OECD)    உள்ள நாடுகளில் உழைப்புச் சக்தியில் தற்காலிக புலம்பெயர் வாசிகளை அதிகம் கொண்ட இரண்டாவது நாடாக அவுஸ்திரேலியா இருந்தது.

ஆனால், அவுஸ்திரேலியாவின் கடுமையான கொரோனா எல்லைக் கட்டுப்பாடுகளினால் புலம்பெயர்ந்தவர்களின் வருகை மிகக் கடுமையாக சரிந்தது. இரண்டு உலகப் போருக்குப் பின்னர் எதிர்கொண்ட மிகப்பெரிய சரிவு இது எனச் சொல்லப்பட்டது. தற்போது அவுஸ்திரேலியா சந்தித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு மிக முக்கிய காரணமாக இது கூறப்படுகிறது.