கொரோனா கால பணி விசாவை இரத்து செய்யும் அவுஸ்திரேலியா

சப்கிளாஸ் 408 அல்லது கோவிட் பணி விசாவை அவுஸ்திரேலியா இரத்து செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான இந்திய மாணவர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. 

இந்த 408 விசா என்பது தற்காலிக பணி விசா என்றும் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் பணியில் இருந்தால் அல்லது முக்கிய துறையில் பணியாற்றுவதற்கான பணிவாய்ப்பை கொண்டிருந்தால் விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் அவ்விசாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

கொரோனா கால எல்லைக் கட்டுப்பாடுகளால் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்த வெளிநாட்டு மாணவர்களுக்காக இவ்விசா முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. விசா காலாவதியான மாணவர் 12 மாதங்கள் வரை கூடுதலாக அவுஸ்திரேலியாவில் இருக்க இவ்விசா அனுமதித்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக இந்த விசா நீட்டிக்கப்படுவதாக கடந்த மார்ச் 2022ல் அவுஸ்திரேலிய உள்துறை அறிவித்திருந்தது.

வரும் ஜூலை 1ம் திகதி முதல், புதிய பணிநேர கட்டுப்பாட்டை(15நாட்களில் 48 மணிநேரம் வரை பணியாற்றலாம்) வெளிநாட்டு மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கும் நிலையில் இந்த விசா ரத்து முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது.

கோவிட் பணி விசா வெளிநாட்டு மாணவர்கள் நேர அளவின்றி பணியாற்ற அனுமதித்த நிலையில், தற்போதைய பணி நேர கட்டுப்பாடு அவர்களது வருமானத்தை குறைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், வயது முதிர்ந்தவர்களுக்கான பராமரிப்பு பணியில் இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தாண்டு டிசம்பர் 31வரை விலக்களிக்கப்பட்டுள்ளது.

“இந்த விசாவை முடிவுக்கு கொண்டு வருவது வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட பலரை பாதிக்கும். அத்துடன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க வேறு விசா வழியை தேட வேண்டியிருக்கும், இந்த விசாவுக்கு கட்டணமும் செலுத்த வேண்டும்,” எனக் கூறியுள்ள புலம்பெயர்வு வல்லுநரான சுமன், கோவிட் பணி விசா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.