லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மூவரை விடுவிக்கும் பரிந்துரையை சட்டமா அதிபர் மீளப் பெற்றார்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சட்டமா அதிபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

‘ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை தேவையில்லை’ என்றும், ‘அவர்களை விடுவிக்க முடியும்’ என்றும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு எழுத்து மூலமாகத் தெரிவித்திருந்தார். எனினும் தமது பரிந்துரையை மீளப் பெறுவதாக சட்டமா அதிபர் மன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாகச் சட்டமா அதிபரின் குறித்த கடிதம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்திருந்த பின்னணியில் தற்போது அதனை மீளப் பெறுவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.  இதேவேளை, சட்டமா அதிபரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டுக்கு எதிராகவும், சட்டமா அதிபரை பாதுகாப்பதற்காகவும் முன்னிற்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டமா அதிபர் தொடர்பில் கடந்த நாட்களில் வெளியிடப்படும் தவறான கருத்துக்கள் தொடர்பில் தங்களது சங்கம் கவலையடைவதாகவும் அந்த சங்கத்தின் பதில் செயலாளர் டஸ்யா கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

‘வழக்கொன்றுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை விடுவிப்பதற்காக சட்டமா அதிபரினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மரபுகளுக்கு அமைய இடம்பெற்றது’ என்றும் டஸ்யா கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார். எனவே, குறித்த தீர்மானம் தொடர்பில் தங்களது சங்கம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘அதன்படி, சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சியையும் தங்களது சங்கம் எதிர்க்கும்’ என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.