முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 32,110ஏக்கர் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், 23,803ஏக்கர் காணிகள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 32,110ஏக்கர் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரி எஸ்.ஜி.சுனில் ரஞ்சித், காடுபேணல் சட்டத்தின்கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் மற்றும், மாந்தை கிழக்கு பிரதேசங்களில் தம்மால் புதிதாக ஒதுக்கக் காடுகளாக 23,803 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காணிகளை வனவளத் திணைக்களம் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், எனவே அவ்வாறு ஒதுக்கக் காடுகளாக அடையாளம் கணப்பட்டுள்ள குறித்த காணிகளை தமக்கு விடுவித்துத் தரவேண்டுமென, முல்லைத்தீவு மாவட்ட செயலர் கதிர்காமுத்தம்பி விமலநாதனை எழுத்துமூலம் கோரியுள்ளது.
எனவே வனவளத் திணைக்களத்தின் தொடர்ச்சியான இந்த அபகரிப்பு முயற்சிக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல திணைக்களங்களின் மூலமாக தமிழ் மக்களுடைய நிலப்பரப்புகள் அபகரிக்கப்படுகின்றன.
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 23ஆயிரத்து 803ஏக்கர் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில், சிராட்டி குளம் பகுதியில் 15ஆயிரத்து, 688ஏக்கர் காணியும், நட்டாங்கண்டல் பகுதியில் 678ஏக்கர் காணிகளையும் வனவளத் திணைக்களம் அபகரிக்க முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிகின்றது.
அதேவேளை துணுக்காய் பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட அமைதிபுரம் என்னும் பகுதியில் 2431ஏக்கர் காணியும், துணுக்காய் பிரதேசசெயலகப்பிரிலுள்ள ஏனைய பகுதிகளிலிருந்து 5006 ஏக்கர் காணியும் வனவளத்திணைக்களம் அபகரிக்கவுள்ளதாக தெரிகின்றது.
இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மேலும் 23,803 ஏக்கர் காணிகளை வனவளத் திணைக்களத்தினர் அபகரிக்கும் நோக்குடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட வனவளத்திணைக்கள அதிகாரி எஸ்.ஜி.சுனில் ரஞ்சித், காடுபேணல் சட்டத்தின்கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் தம்மால் புதிதாக ஒதுக்கக் காடுகளாக 23,803ஏக்கர் காணிகள் அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும், எனவே தம்மால் ஒதுக்கக் காடுகளாக அடையாளம் கணப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவித்துத் தரவேண்டுமென, முல்லைத்தீவு மாவட்டசெயலர் கதிர்காமுத்தம்பி விமலநாதனை எழுத்துமூலம் கோரியுள்ளதாகவும் எம்மால் அறியமுடிகின்றது.
குறிப்பாக யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திலே வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி (எல்), தொல்லியல் திணைக்களம், படையினர், இல்மனைற் தொழிற்சாலை அமைப்பதற்காக கொக்கிளாயில் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள், கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் எமது தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் அபகரித்துள்ளமை, பௌத்தபிக்குகள் தொல்லியல் திணைக்களத்தோடு இணைந்து அபகரித்துள்ள காணிகள், வெலி ஓயா என்னும பிரதேசசெயலகப்பிரிவு உருவாக்கப்பட்டு அதனூடாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் என, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேல் அபகரிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் புதிதாக 23,803 ஏக்கர் காணிகளை வனவளத திணைக்களத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முனைப்புக்காட்டிவருகின்றனர்.
இந்தக் காணிகள் யாவும் ஏற்கனவே எமது தமிழ் மக்களுடைய குடியிருப்புக் காணிகளாகவும், எமது மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயக்காணிகளாகவும் தான் இருந்தன.
அதேவேளை முதலாவது வடமாகாணசபை இருந்தகாலத்தில், நான் வடமாகாணசபையினுடைய உறுப்பினராக இருந்தபோது, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஒன்றில் வனவளத் திணைக்களத்தினர் கருத்துத் தெரிவிக்கும்போது, யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தாம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்தவுடன் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியிலே 15,000ஏக்கருக்கும்மேல் தமது எல்லைக்கல் நாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள எமது தமிழ்மக்கள் கடந்தகால யுத்தம் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது இடங்களிலிருந்து, இடம்பெயர்ந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இலங்கைப் படையினரால் வலுக்கட்டாயமாக அவர்களுடைய பூர்வீக இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுமிருந்தனர்.
இவ்வாறாக தமது வாழிடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மற்றும், படையினரால் வெளியேற்றப்பட்ட எமது தமிழ்மக்கள் பல வருடங்களின் பின்னரே அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
இப்படியாக இருக்கும்போது, எமது தமிழ் மக்கள் தமது வாழிடங்களிலிருந்து இடம்பெயர்வதற்கு முன்னர் பயன்படுத்திய காணிகள் தற்போது சிறிய பற்றைகள், புதர்கள் வளர்ந்த இடங்களாக காட்சி தருகின்றன. அவ்வாறான இடங்களைக்கூட விட்டுவைக்காது வனவளத்திணைக்களத்தினர் அபகரிப்புச் செய்கின்றனர்.
இவர்களின் இந்தப் போக்கு மாற வேண்டும். நிச்சயமாக எமது முல்லைத்தீவு மாவட்டத்திலே வனவளத் திணைக்களம் யுத்தகாலத்திற்கு பின்பு ஏற்கனவே 32ஆயிரத்து 110காணிகளை அபகரித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மேலும் இந்த 23,803ஏக்கர் காணிகளை இவ்வாறு அபகரிப்பதற்கு முனைந்தால், எமது தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு எங்குசெல்வது? எமது தமிழ் மக்கள் குடியிருப்புக் காணிகள்கூட இல்லாமல் அவதிப்படுவதை யாரிடம் சொல்வது?இப்படியானதொரு கொடூரமான செயற்பாட்டினை இந்த அரசாங்கம் திணைக்களங்கள் ஊடாக முன்னெடுத்துள்ளனர். எனவே இந்த அபகரிப்புச் செயற்பாட்டிற்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்”- என்றார்.