காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்- அமெரிக்கா, ஐநா கவலை

120 Views

போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்கு காவல்துறையினரும் இராணுவத்தினரும் இன்று அதிகாலை நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மேலும் ஜனாதிபதி அலுவலகம் முதல் கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் வரையான பகுதி  காவல்துறை  மற்றும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களும் அகற்றப்பட்டுள்ளன.

இதன்போது 08 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக  காவல்துறை  ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரம சிங்க பதவியேற்றதன் பின் இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு.

எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இலங்கைக்கான பிரிட்டன் தூதர் சாரா ஹல்டன், “காலிமுகத் திடல் போராட்டக் களத்தில் இருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன என பிரிட்டன் தூதர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply