இனப்படுகொலையுடன் தொடர்புடையவர்கள் உயர் பதவிகளை பெற்றுள்ளனர்-அருட்தந்தை மா.சத்திவேல்

414 Views

உயர் பதவிகளை பெற்றுள்ளனர்

இனப்படுகொலையுடன் தொடர்புடையவர்கள் உயர் பதவிகளை பெற்றுள்ளனர். அத்தோடு இனவாத கருத்துக்களை கூறி முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க தூபமிட்டவர் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று  வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் பாகிஸ்தானில் பிரியந்த குமார மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் தொடர்ந்து கொல்லப்பட்ட விதமும் நாகரீக சமூகத்தால் வெறுக்கபடும் மிலேச்சத்தனமான பயங்கரவாத செயல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனோடு சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட்டாலும் இத்தகைய கொள்கையுடையவர் சமூகத்தில் திருந்தி வாழாதவரை நீதி விடப்போவதில்லை.

நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு பாகிஸ்தான் பிரதமரால் மட்டும் முடியாது சமய மற்றும் அரசியல், சிவில் சமூகத் தலைவர்களின் கூட்டு செயற்பாட்டால் மட்டுமே அதனை எட்டமுடியும். இதற்காக தியாக சிந்தையுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட அனைத்து தரப்புக்களும் இதயசுத்தியுடன் முன்வரவேண்டும்.

உயிரிழந்த பிரியந்த குமாரவின் இழப்பினால் வாடும் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படும் எந்த இழப்பீடும் ஈடாக போவதில்லை. அதனால் அவர்களுக்கு ஆறுதல் கிட்டப் போவதுமில்லை.

பாகிஸ்தான் பிரதமரின் துரித நடவடிக்கையால் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு “நான் உயிரோடு இருக்கும்வரை இத்தகைய செயற்பாடுகளுக்கு இடமளிக்க மாட்டேன்” எனும் பாகிஸ்தான் பிரதமரின் கூற்று உணர்வுகளுக்கும் அரசியலுக்கும் உட்பட்டதாக மட்டும் இருக்கக்கூடாது. கொலைகளை அரசியலாக்குவதும், அரசியலுக்காக கொலைகளை செய்வதும் அரசியல் கலாச்சாரமாகி உள்ள காலமிது.

பிரியந்த குமாரவின் படுகொலைக்கு நீதி கேட்டு சமயத் தலைவர்களும், சட்டத்தரணிகளும் , சிவில் சமூகத்தினரும் அஞ்சலி நிகழ்வை நடத்தியதோடு அடையாள எதிர்ப்பையும் வெளிக்காட்டுகின்றமை வரவேற்கத்தக்கதே. இலங்கை ஆட்சியாளர்களும் தம் கடமைக்கு பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 2.5 மில்லியன் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் மிருசுவில் படுகொலையோடு தொடர்புடைய இராணுவ அதிகாரி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மற்றும் பிரதேசங்களில் இளைஞர்கள் காணாமல் போனமைக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடற்படை தளபதி குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய பதவியும் பெற்றுள்ளார். இனப்படுகொலை தொடர்புடையவர்கள் உயர் பதவிகளை பெற்றுள்ளனர். அத்தோடு இனவாத கருத்துக்களை கூறி முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க தூபமிட்டவர் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடந்தேறிய இன அழிப்புடனான இனப்படுகொலைக்கும், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதிகேட்டு வட கிழக்கு தமிழர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் நீதிக்கான குரலுக்கு செவிசாய்த்து நீதி கிட்ட செயற்பட்டால் மட்டுமே சமயத் தலைவர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூகத்தினர் பிரியந்த குமாரவிற்காக எழுப்பும் நீதிக்காகன குரல் உண்மையானதாகவும், நியாயமானதாகவும் அமையும்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு பாகிஸ்தான் முழுமையாக ஆதரவு வழங்கிய நாடு தான். அதற்காக தற்போதைய இலங்கை ஜனாதிபதி பகிரங்கமாகவே நன்றி கூறியுள்ளார். உண்மையான நீதி என்பது கருத்து சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றோடு இனப்பன்மையை அங்கீகரித்து இனங்கள் கௌரவமாக வாழ்வதற்கான உரிமையையும் உறுதிபடுத்த வேண்டும்.

இதனையும் சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானும் ஏற்று இலங்கை வாழ் மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு அதனை உறுதி செய்ய வேண்டும் என்று பிரியங்க குமார் கொலைக்கு நீதி கேட்கும் காலச் சூழ்நிலை இந்தக் கோரிக்கையும் முன்வைக்கின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad இனப்படுகொலையுடன் தொடர்புடையவர்கள் உயர் பதவிகளை பெற்றுள்ளனர்-அருட்தந்தை மா.சத்திவேல்

Leave a Reply