யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் தொற்றால் மரணம்! 52 பேருக்கு தொற்று

Deaths 600 யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் தொற்றால் மரணம்! 52 பேருக்கு தொற்றுயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளையில், யாழ்ப்பாணத்தில் 52 பேர் உட்பட வடக்கில் 72 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். போதனா மருத்துவமனை, யாழ். பல்கலைக் கழகங்களின் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே இந்த விடயம் தெரியவந்தது.

யாழ். போதனா மருத்துவ மனையில் 294 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 66 பேர் தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட்டனர். இதன்படி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 25 பேரும், வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவ மனையில் 5 பேரும், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 2 பேரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் ஒருவரும், சங்கானை பிரதேச மருத்துவ மனையில் ஒருவரும், நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவரும் என 47 பேர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர்.

இதே போன்று கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 4 பேரும், பளை பிரதேச மருத்துவமனையில் 2 பேரும், மன்னார் பொது மருத்துவமனையில் 3 பேரும், செட்டிக்குளம் ஆதார மருத்துவ மனையில் 4 பேருமாக 13 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

தவிர, முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட மூவருக்கும் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. யாழ். பல்கலைக் கழகத்தில் நேற்று 177 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 11 பேர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர். இதன்படி, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் நால்வரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவரும், வவுனியா தெற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவரும், வவுனியா சிறையில் ஒருவரும், காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது.

ilakku-weekly-epaper-140-july-25-2021