சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மேல்முறையீட்டு மனு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் அது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து, சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கான தயாரிப்புகளுக்கு உதவுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் குழுவொன்று சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்தது.
அனோஜனின் வழக்கைக் கையாளும் சட்டத்தரணிகளுடன் இக்குழு பல சுற்றுக் கலந்தாலோசனைகளை நடத்தி, சட்டப்பூர்வ சமர்ப்பிப்புகளை இறுதி செய்ய உதவியது.
சவூதி உயர் நீதிமன்றமானது அந்நாட்டின் மிக உயர் நீதித்துறை அதிகார அமைப்பாகும். இது கீழ் நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்மையாகச் சட்டம் மற்றும் நடைமுறைக் காரணங்களின் அடிப்படையில் மறுஆய்வு செய்கிறது.
மேற்படி இலங்கை சட்டக் குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அஸார்ட் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டத்தரணி ஹஃபீல் பாரிஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இச்செயல்முறையில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ஜித்தாவில் உள்ள துணைத் தூதுவர் நீதியரசர் முகமத் லஃபார் மற்றும் சில்மி ரியாஸ்தீன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அனோஜனின் வழக்கிற்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தூதுவர் அஜ்வத் முன்னதாக அவரைச் சிறையில் சென்று பார்வையிட்டிருந்தார்.
இறுதி செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விரைவில் சவூதி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மரண தண்டனையை எதிர்த்துப் போராடும் சட்டப்பூர்வ முயற்சிகளின் அடுத்த கட்டத்தைக் குறிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.



