மாகாணசபைத் தேர்தலும் -கிழக்கின் நிலையும் – மட்டு.நகரான்

181 Views

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புமாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தமிழர் அரசியலில் கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பில் ஆர்வம் குறைந்திருந்த நிலையிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ள முழுமையான ஆர்வத்துடன் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் செயற்படுவதைக் காணமுடிகின்றது.

மாகாணசபைத் தேர்தல் என்பது, இன்று வடகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சூழ்நிலைக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

வடகிழக்கு இணைந்த தமிழ்த் தேசியத்தின் மிக முக்கியமான கோரிக்கையாக வடகிழக்கு இணைந்த மாகாணசபையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாய்கிழியக் கூவியவர்கள் இன்று அதனை உச்சரிப்பதையும் அபத்தம் என்று நினைக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர்.

இந்த நாட்டில் யுத்தம் ஒன்று ஏன் நடைபெற்றது, அதன்மூலம் தமிழ் மக்கள் எதற்காக அதிக இழப்புகளை எதிர்கொண்டார்கள், ஏன் பல இலட்சக்கணக்கான மக்களைப் பலி கொடுத்தார்கள் என்பதையெல்லாம் இன்று தமிழ் அரசியல் பரப்பில் உள்ளவர்கள் மறந்து விட்டார்களா என்று கேட்கும் அளவுக்கு இன்று தமிழ்த் தேசியத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரல் காணப்படுகின்றது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் வடகிழக்கு இணைப்புத் தொடர்பிலும், மாகாணசபை முறைமையானது இன்னும் முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. அதனால் தமிழ் மக்களுக்கான சாதகபாதமான நிலைமைகள் தொடர்பிலும் எந்தவித அறிவுறுத்தல்களும் இதுவரையில் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புஇவ்வாறான நிலையில் சர்வதேசத்திற்கும், இந்தியாவுக்கும் தாங்கள் மாகாண சபையினை நடாத்தி விட்டோம். அதன்மூலம் தமிழர்களுக்கு அனைத்தையும் வழங்கி விட்டோம் என்ற ரீதியில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கான விடயங்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

ஏற்கனவே மாகாணசபையில் நடைமுறையிலிருந்த பல அதிகாரங்களைக் கிழக்கு மாகாண சபையிலிருந்து அரசாங்கம் அகற்றிவரும் நிலையில், எதிர்காலத்தில் அமையும் மாகாணசபை தமிழர்களுக்கு எவ்வாறான நலனை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

குறிப்பாகக் கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பல பாடசாலைகளும், வைத்தியசாலைகளும் மத்திய அரசாங்கத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபை ஊடாக தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு மாகாணசபை வளங்களைக் கிழக்கு மாகாண ஆளுநர் பயன்படுத்தி வருகின்றார்.

இவ்வாறான நிலையிலேயே இன்று மாகாணசபைத் தேர்தலை நோக்கியுள்ள நிலையில், அதற்காக தமிழ்த் தேசிய அரசியலில் வெளியிடப்பட்டுவரும் கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளன.

மக்களுக்கான அரசியல் என்பது, மக்களின் எண்ணங்களை, அவர்களின் ஆழ்மனதில் இருந்து பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் அரசியல் சூழலில், அவ்வாறான நிலை பெரும்பாலும் இல்லை. அநேகமானவர்களின் அரசியல் அரங்காற்றுகைகள், தேர்தல்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றன.

ஒத்திவைக்கப்பட்டு வந்த மாகாணசபைத் தேர்தல்களுக்காக, அதிகமான முக்கியத்துவத்துடன் காத்திருந்த தரப்பினர் என்றால், அது தமிழ்த் தேசிய கட்சிகளைத் தான் சொல்ல முடியும். தென் இலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகள் கூட, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், பெரிய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

ஆனால், மாகாண சபை முறையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகள், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கான தேர்தலுக்காக, அதிக முக்கியத்துவத்துடன் காத்திருக்கின்றன. இது, அடிப்படையில் முரண்பாடானதாகவுள்ளது. இந்த முரணுக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், எந்தவித பாகுபாடுமின்றி இருக்கின்றன.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கு மாகாணத்தின் நிலைமை தொடர்பில் சிந்திக்காத நிலையில் மாகாணசபைத் தேர்தலை மட்டும் நோக்காக கொண்டு செயற்படும் நிலைமையினைக் காணமுடிகின்றது.

அனுராதா யகம்பத்
அனுராதா யகம்பத்
ரிசாத் பதியுதீன்
ரிசாத் பதியுதீன்

குறிப்பாக இம்முறை கிழக்கு மாகாண சபையினைத் தமிழர் தரப்பு கைப்பற்றி விடாமலிருப்பதற்கு சிங்களத் தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் விடுதலையும் அதன் பின்னணியாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தினைத் தமிழர் தரப்பு கைப்பற்றி விடாமலிருக்க கிழக்கில் முஸ்லிம்-சிங்கள கட்சிகளின் கூட்டணியானது சில செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அண்மைக் காலமாக சில தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. அதற்கான செயற்பாடுகளைத் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநராகவுள்ள அனுராதா யகம்பத் முன்னெடுப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று இலங்கையுள்ள பொருளாதார சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு வெளிநாட்டு உதவிகள் என்பது மிகவும் முக்கியத்துவமானதாக அரசாங்கம் கருதும் சூழ்நிலையில், இன்று வெளிநாட்டு சக்திகளை மகிழ்விப்பற்காக சிறுபான்மையினத்திற்கு ஏதாவது செய்ய வேண்டிய தேவை இன்று அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக வெறுமனே மாகாணசபைத் தேர்தலை நடாத்தி முடித்துவிட வேண்டும் என்ற நிலையில் அரசாங்கம் செயற்பட்டுவரும் அதேநேரம், கிழக்கு மாகாண சபையினைத் தமிழர்கள் கைப்பற்றிவிடக் கூடாது என்பதுடன், மாகாணத்திற்குட்பட்ட பல விடயங்களை மத்திய அரசாங்கத்திற்குள்ளும் கொண்டுவரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிள்ளையான்
பிள்ளையான்

எவ்வாறாயினும் கிழக்கில் சிங்கள-முஸ்லிம் முதலமைச்சர் ஒருவருக்கு பதிலாக தங்களது விசுவாசியான பிள்ளையானையாவது கொண்டுவந்து, மாகாணசபையின் அதிகாரங்களைப் பறிக்கும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக இன்று மாகாணசபை தொடர்பிலான தெளிவுபடுத்தல்கள் என்பது, அரசியல் கட்சிகளில் உள்ள முக்கியஸ்தர்களுக்கே கிடையாது. கிழக்கினைப் பொறுத்தவரையில், பாராளுமன்றத் தேர்தலில் பதவி இழந்தவர்களும், ஏற்கெனவே மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களுமே, மாகாண சபைத் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றார்கள்.

இவர்களின் அநேகருக்கு, மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பின் அதிகார அளவுகள் குறித்துக்கூட எந்தத் தெளிவும் இல்லை. பெரும்பாலானவர்கள், மாகாண சபைத் தேர்தலை, பதவிகளுக்கான ஒரு கருவியாக மாத்திரமே காண்கின்றார்கள்.

முதலாவது மாகாணசபை தொடர்பிலும், மாகாணசபையின் அதிகாரங்கள், அதன் செயற்பாடுகள் தொடர்பில் அரசியல்கட்சிகள் சார்ந்தவர்களுக்கு அறிவூட்டப்பட வேண்டும். அவ்வாறு உள்ளபோதே எதிர்காலத்தில் மாகாணசபை ஆட்சியமையும் போதும் அதன் அதிகாரங்கள் ஆளுநர் கையெடுக்கும்போது அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

வெறுமனே வடகிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தேர்தலொன்றாகவே மாகாணசபையினை நோக்குகின்றார்களே தவிர, அதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்ற வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

தமிழ்த் தேசிய அரசியல்

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் மாகாணசபையானது தமிழர்களுக்கு முக்கியத்துவமில்லாது விட்டாலும், அதனைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கைப்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பிள்ளையான் முதலமைச்சராகயிருந்த கடந்த காலத்தில் வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் தமிழர்களுக்குச் சார்பாகக் கொண்டுவரப்பட்ட பல சட்டங்கள் செயலிழக்கச் செய்யப்படுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளபோதிலும், அதனை 2008இல் பிள்ளையான் பயன்படுத்தியிருந்தால், தமிழர்களின் காணிகளைக் கபளீகரம் செய்வதற்கான நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால் மகிந்த ராஜபக்ஸ பிள்ளையானை முதலமைச்சராக்கித் தமக்குச் சாதகமான நிலைமையினை ஏற்படுத்தியதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணசபை தமிழர்களுக்கு எதிரான மாகாண சபையான மாற்றமடைந்துள்ளது.

தமிழ்த் தேசிய அரசியலுக்கு கிழக்கில் புதைகுழி தோண்டும் நிலை

இன்று கிழக்கு மாகாணத்தில் இனவிகிதாசார அடிப்படையில் தமிழர்களே முன்னிலையில் உள்ள போதிலும், அனைத்து விடயங்களிலும் தமிழர்கள் மாகாணசபை மூலம் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாணசபையின் தேவைப்பாடு தமிழ்த் தேசியத்தில் இன்று முக்கியமான ஒரு விடயமாகக் காணப்படுவதன் காரணமாக அதனைத் தமிழர்கள் தக்கவைப்பதற்குச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது தொடர்பில் தமது அரசியல் போட்டியினால் தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறிழைக்குமானால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு கிழக்கில் புதைகுழி தோண்டும் நிலையே ஏற்படும்.

1 COMMENT

  1. […] மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தமிழர் அரசியலில் கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பில் ஆர்வம் குறைந்திருந்த நிலையிலும், இன்று அந்த நிலைமை  […]

Leave a Reply