திருமலை ஆயர், தென்கயிலை ஆதினத்தின் முயற்சிக்கு அனந்தி வரவேற்பு

340 Views

திருமலை ஆயர், தென்கயிலை ஆதினத்தின் முயற்சிக்கு அனந்தி வரவேற்புதிருமலை ஆயர், தென்கயிலை ஆதினத்தின் முயற்சிக்கு அனந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இருந்து அதிவணக்கத்துக்குரிய ஆயர் நோயல் இமானுவல் அவர்களும் தென்கயிலை ஆதீன தவத்திரு அகத்தியர் அடிகளாரும் வடக்கு-கிழக்கு தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேசத்துக்கு முன்வைக்கும் கோரிக்கைகளை முரண்பாடில்லாமல் முன்வைக்க வழிவகுக்கும் தமிழ் ஜனநாயகச் செயற்குழு செயற்பாட்டை வரவேற்பதாக அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

இரண்டு முக்கிய அறிவித்தல்கள் வெளிவந்திருக்கின்றன.

முதலாவது, திருகோணமலையில் இருந்து அதிவணக்கத்துக்குரிய ஆயர் நோயல் இமானுவல் அவர்களும் தென்கயிலை ஆதீன தவத்திரு அகத்தியர் அடிகளாரும் வடக்கு-கிழக்கு தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேசத்துக்கு முன்வைக்கும் கோரிக்கைகளை முரண்பாடில்லாமல் முன்வைக்க வழிவகுக்கும் தமிழ் ஜனநாயகச் செயற்குழு உருவாக்கியது பற்றிய அறிவித்தல்.

இனிமேல் நிரந்தரமான ஓர் அணுகுமுறையூடாக, பரந்துபட்ட ஊடக, சிவில் சமூக, கருத்தியல், கல்வி மற்றும் மக்கள் மட்டங்களில் இருந்து எழுகின்ற கோரிக்கைகளை எவ்வாறு தமிழ்த் தேசிய நாடாளுமன்றினர் அணுகுகிறார்கள் என்பதை வெளிப்படைத் தன்மையோடு வெளிப்படுத்தும் வகையில் நிரந்தரமான ஒரு தீர்வைக் காணவேண்டும் என்று இந்தச் செயற்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஐவர் கொண்ட செயற்குழுவும் இளைய சட்டத்தரணிகள் மூவர் கொண்ட பேச்சாளர் குழுவும் ஏற்படுத்தப்பட்டுவருவது தொடர்பான இந்த அறிக்கை ஆயர் அவர்களதும் ஆதீனம் ஐயா அவர்களதும் கையெழுத்துகளோடு வெளியாகியிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட முன்பதாக, மக்கள் தளத்தில் கலந்துரையாடலையும் ஆலோசனையையும் அறிவுபூர்மாக மேற்கொள்ளவேண்டும் என்று இந்தக் குழு முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம். மன்னாரைச் சேர்ந்த இளைய தலைமுறைச் சட்டத்தரணி, அன்ரனி றொமொல்சன், மூன்று பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். பல பத்திரிகைகள் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. சமூக வலைத்தளங்களில் பலரும் இதை வரவேற்றுள்ளார்கள்.

அடுத்த அறிக்கை அமெரிக்காவில் இயங்கும் புலம்பெயர் அமைப்புகள் இணைந்து கொண்டுவந்திருக்கும் புலம்பெயர் கொள்கை நிலைப்பாடு தொடர்பானது. இந்த அறிக்கையிலும் சில முக்கியமான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை இரண்டையும் நாம் மனமார வரவேற்கிறோம். அதேவேளை, சில வேண்டுகோள்களையும் இந்த இரண்டு தரப்பினருக்கும் முன்வைக்கிறோம்.

முதலாவது அறிக்கை தொடர்பாக எனதும், எனது கட்சியினதும் நிலைப்பாட்டை சற்று விரிவாகவே முன்வைக்க விரும்புகிறேன்.

1. ஆயரும் ஆதீனமும் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மனங்களில் இருக்கும் கருத்தைப் பிரதிபலித்து நல்லதொரு திட்டத்தை வகுத்து தமிழ் ஜனநாயகச் செயற்குழுவைச் செயற்பாட்டில் ஈடுபடுத்தியிருப்பது மிகவும் பொருத்தமானது. பால், மத, பிரதேச சமநிலை வலியுறுத்தப்பட்டிருப்பது மிகவும் நல்லது. தமிழ் ஜனநாயகக் குழுவில் பெண்களின் பங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் என்பது எனது கருத்து.

2. எமது கட்சி, தற்போது பாராளுமன்ற உறுப்பினர் எவரையும் கொண்டிருக்காவிடினும், நாம் இணைந்து செயற்படும் முன்னணியில் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரும் இந்த விடயத்தில் நிச்சயமாக ஒத்துழைப்பார் என்று நம்புகிறோம்.

3. கலந்துரையாடல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாகவே அணுகப்படவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தற்போது கொண்டிருக்காத கட்சி என்பதால், நானும் எனது கட்சி சார்பானவர்களும் இந்தக் கலந்துரையாடல்களில் ஆரம்பத்திலேயே உள்வாங்கப்படுவதை விரும்புகிறோம் என்பதை சட்டத்தரணி அன்ரனி றொமொல்சன் ஊடாக தமிழ் ஜனநாயகச் செயற்குழுவுக்கு அறிவிக்கவுள்ளோம்.

4. தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் பதின்மூவர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள். இந்த உறுப்பினர்களோடு முதலில் கொள்கை தொடர்பான, குறிப்பாகத் தமிழ்த் தேசியம் தொடர்பான, சில அடிப்படைகளைத் தெளிவாக வரையறுத்துக்கொண்டு செல்வதே பொருத்தமாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்.

5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சியில் நான் இணைக்கப்பட்ட பின்னர், அதில் இருந்தவாறே தமிழ்த் தேசிய நிலைப்பாடுகளை வலியுறுத்திவந்ததேன். இன அழிப்பு விசாரணையைப் பகிரங்கமாகக் கோரியமைக்காகவே நான் வெளியேற்றப்பட்ட அநீதி நடைபெற்றது. இதனாலேயே நான் தனிக்கட்சி ஆரம்பிக்கவேண்டிய தேவையும் எழுந்தது. ஆனால், ஜனவரி 2021ம் ஆண்டு ஜெனீவாவுக்கு கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் ஐயா அவர்கள் அனுப்பிய அறிக்கையில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோரி அதிலே கையெழுத்திட்டிருக்கிறார். அதிலே, கஜேந்திரகுமாரும் விக்கினேஸ்வரன் அவர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையை நேர்த்தியாக வெளிக்கொணருவதற்கு நானும் எனது ஆதரவை நல்கியிருந்தேன். குறிப்பாக எமது கூட்டணியில் இருக்கும் சிவாஜிலிங்கம் அவர்களும் சட்டத்தரணி சிறிகாந்தா அவர்களும் ஆழமாக வாதிட்டும் இருந்தார்கள். தற்போது கூட்டமைப்பு, அதிலும் குறிப்பாகத் தமிழரசுக்கட்சி, தனது கொள்கையை முன்னேற்றியுள்ளதென்றால், அதற்கு என்போன்றவர்களின் விமர்சனமும் காரணம் என்பதை தமிழ் ஜனநாயகச் செயற்குழுவுக்குக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

6. தொடர்ச்சியாகப் பலமுறை ஜெனீவா சென்று அங்கு மனித உரிமைப் பேரவையில் பங்கேற்று இன அழிப்புக்காகவும் காணாமலாக்கப்பட்டோரின் நீதிக்காகவும் குரல் கொடுத்துவரும் நான்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெருமளவில் அங்கு கண்டதில்லை. சில சமயங்களில் சிறீதரன் அவர்களை மட்டும் கண்டிருக்கிறேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை அடிக்கடி கண்டிருக்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு ஏன் பங்கேற்கவில்லை என்பதையும் தமிழ் ஜனநாயகச் செயற்குழு ஆராயவேண்டும்.

7. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை கையெழுத்திட்டுச் சமர்ப்பிக்கும் கோரிக்கைகளுக்குச் சர்வதேச அரங்கில் ஒரு சிறப்பு இருக்கிறது. அது என்னவென்றால் மக்களால் நாடாளுமன்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் வழங்கும் ஆணை என்பதாகும். இந்த அடிப்படையிலேயே சமாதானப் பேச்சுகள் நடைபெற்றபோது அதிலே பங்கேற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றினர் மக்களாணையை வழங்கியிருந்தார்கள். இதைப்போல, தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கியிருக்கவேண்டும். அவ்வாறு இயங்கியிருந்தால், கஜேந்திரகுமார், கஜேந்திரன் மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோரும் சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா அவர்களும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்காது. நானும் சிவகரனும் வெளியேற்றப்படும் நிலையும் உருவாகியிருக்காது. எனவே, பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பொது நிலைப்பாட்டில் கையெழுத்திடுமாறு மேற்கொள்ளப்படும் இந்தப் புதிய நடவடிக்கை வெற்றிபெறவேண்டும். இல்லாதுவிடில் மேலும் பிரிவுகளும் சிக்கல்களும் உருவாகும்.

எங்களுக்குள் கட்சிகளின் எண்ணிக்கையும் கூட்டமைப்புகளின் எண்ணிக்கையும் பெரும். அதேவேளை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவம் குறையும். இதை உணர்ந்து, குறிப்பாக சம்பந்தன் ஐயா அவர்கள், தான் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் இவ்வேளையில் பெருமனதோடு இந்த முயற்சியை வரவேற்கவேண்டும். திருகோணமலையில் இருந்து வடக்கு-கிழக்கு அனைத்தையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி வெற்றிபெற அவர் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் இடையில் நடந்த தவறுகளோ, விபத்துகளோ, அனைத்தையும் தாண்டி நாங்கள் பயணிக்க முடியும்.

அடுத்ததாக, அமெரிக்காவில் இருக்கும் அமைப்புகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், 1948ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்துக்குள் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட சிங்களக்குடியேற்றங்களுக்கு பொதுவாக்கெடுப்பில் பங்கேற்கும் உரிமை இருக்கக்கூடாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இது ஒரு முக்கியமான விடயம். ஆனால், இதை மேலும் தெளிவாகவே குறிப்பிடலாம் என்பது எனது கருத்து. அத்துமீறி, தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களை நியாயமற்றவையாகக் கருதுவதில் தவறு ஏதும் இல்லை.

அதைப் போலவே, இங்கிருந்து பெருமளவு மக்கள் புலம்பெயரவேண்டிய சூழல் போரினால் தான் ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து தாயகத்தில் மீண்டும் குடியேற விரும்பும் இலங்கைத் தீவைப் பூர்வீமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்களும் தமிழ்த் தேசத்தின் இணைபிரியா அங்கம் என்பது எமது கட்சியின் நிலைப்பாடு.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply