அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பே தவிர, விடுதலை அல்ல- அருட்தந்தை மா.சத்திவேல்

506 Views

unnamed 2 1 அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பே தவிர, விடுதலை அல்ல- அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளுக்கு  பொது மன்னிப்பு கொடுக்கப் பட்டிருக்கிறதே தவிர விடுதலை கொடுக்கப்படவில்லை என. என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு தியாகி அறக்கட்டளை நிதியத்தின் வாழ்வாதார நிதியினை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவால் வழங்கி வைக்கப்பட்டது தொடர்பாக இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

எங்களுக்கு எதிராக செயல்பட்டாலும் நாங்கள் உங்களை உறவுகளாகவே பார்க்கிறோம். “நீங்கள் நல்லவர்களாக இருந்தால்தான் வீடு போன்ற வேறு தேவைகளை செய்வோம். உங்களை சமூகம் பார்த்து கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டார். இதனைத்தான்” சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிப்பது”என்பது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதிகள் முன்னால் “உங்களை சமூகம் பார்த்து கொண்டிருக்கின்றது. நீங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்” என்பது இராணுவம் உங்களை பார்த்து கொண்டிருக்கிறது” என்பதாகத்தான் கொள்ளல் வேண்டும். ஆதலால் தான் நாம் ஏற்கனவே கூறினோம் இவர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர விடுதலை கொடுக்கப்படவில்லை என. அது தற்போது மிகத் தெளிவான நிதர்சனமாகியுள்ளது.

அறக்கட்டளை அமைப்பு இராணுவத்தை முன்னிலைப்படுத்த தேவையுமில்லை. இராணுவம் தலையிடத் தேவையுமில்லை. ஆனால் உள்நோக்கத்துடனேயே அரசியல் கைதிகளுக்கு படை அதிகாரிகள் முன்னிலையில் இது வைபவமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அரசியல் கைதிகளிடம் நீங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். என்றது ஒட்டுமொத்த தமிழ் தேசப்பற்று அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே உணர முடிகின்றது.

வாழ்வாதார உதவி என்பது சுய பொருளாதாரத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கான உதவியாக அமைதல் வேண்டும் அதில் எந்தவிதமான அச்சுறுத்தலோ, இராணுவ மற்றும் புலனாய்வு கண்காணிப்போ இருக்கக் கூடாது.

ஜனநாயக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாகவே தமிழர்கள் தம் அரசியல் கொள்கைகளை வகுத்து சுய கௌரவத்தோடு வாழ்வதற்கான பயணத்தை தொடர்ந்தனர். அதனையே தெற்கின் ஆட்சியாளர்கள் பயங்கர வாதமாக சித்தரித்து பேரினவாதத்தை தொடர்ந்து முன்னகர்த்தி அரசியல் செய்தனர். அத்தோடு பயங்கரவாத சட்டத்தை நிறைவேற்றி தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களையும் அவர்களுக்கு துணை நின்றோரையும் வகை தொகையின்றி கைது செய்து சித்திரவதை செய்து பிணை இன்றி சிறைகளுக்குள் தள்ளினார். இவர்கள் இச் சட்டத்தினால் தம் இளமையை இழந்து, எதிர்காலத்தை இழந்து,எதிர்கால கனவுகளை இழந்து நீண்ட சிறை வாழ்வை அனுபவித்தனர். இக் கொடுமைக்கு காரணமானவர்களே நல்லவர்களாக திருந்த வேண்டும். இதற்கு தடையாக இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமலிருப்பதே பாரிய குற்றமாகும்.

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களின் அரசியலை இல்லாதொழிப்பதற்கும், அரசியல் செயல்பாட்டை தடுப்பதற்கும், அரசியல் பழிவாங்கலை முன்னெடுப்பதற்கும் அமுலாக்கப்பட்ட ஒரு சட்டமாகும். இதனை மாற்ற விரும்பாதவர்கள் எம்மை பார்த்து நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது நகைப்புக்கு இடமாக உள்ளது. அரசியல் தீர்வு இன்றி இருக்கும் நிலையில் அக்கூற்று இருண்ட காலத்தையே அடையாளப் படுத்துகிறது.

அரசியல் கைதிகள் என நாம் அடையாளப் படுத்தப்படுவோர் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவே தமிழர்களுக்குரிய கௌரவமாக அமைவதோடு, சமூக மயமாக்கப் பட்டவர்களுடைய சுயகௌரவம், சுதந்திரம், சுதந்திர நடமாட்டம் என்பவை உறுதி செய்யப்பட்டல் வேண்டுமென அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply