அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவை சந்திக்கும் – வங்கிகள் எச்சரிக்கை

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு பகுதியில் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி காணும் அது பின்னர் அடுத்த வருட அரையாண்டு பகுதியில் மீண்டும் அதில் இருந்து மீழும் என அமெரிக்காவின் வங்கிகள் இந்த வாரம் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எனினும் இந்த வீழ்ச்சி மிகவும் மோசமாக இருக்காது. வட்டி விகித உயர்வு அடுத்த வருடத்தின் அரையாண்டு பகுதியில் குறைவடையும். இது ஒரு தொழில்நுட்ப பொருளாதார வீழ்ச்சியாகவே இருக்கும் என அமெரிக்க வங்கியின் தலைவர் பிரைன் மொனிகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டு காலாண்டு காலப்பகுதியில் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி பூச்சியத்திற்கு கீழே சென்றால் அது தொழில்நுட்ப பொருளாதார வீழ்ச்சி என கூறப்படும்.

அமெரிக்காவின் பொருளாதாரம் காலாண்டு பகுதியில் 0.5 தொடக்கம் 1 விகிதம் வரை சுருங்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அமெரிக்காவில் பணவீக்கம் மிகவும் அதிகரித்ததால் அமெரிக்க அரசு வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக அதிகரித்திருந்தது. இந்த வருடமும் கடந்த மாதம் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டபோதும் அது மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.