ஜோர்ஜியாவில்  கலவரத்தை தூண்டினார் அரச தலைவர்

வெளிநாடுகளில் இருந்து 20 விகித்திற்கும் அதிகமான நிதியை பெறும் ஊடகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தம்மை வெளிநாட்டு முகவர்களாக பதிவு செய்ய வேண்டும் என ஜோர்ஜியா நாடாளுமன்றம் இந்த வாரம் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக அங்கு எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை மேற்கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருவதுடன், அரச தலைவரும் இந்த போராட்டத்திற்கு தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 1930 களில் அறிமுகப்படுத்த சட்டத்தை ஒத்த தீர்மானத்தையே தான் கொண்டுவந்ததாகவும், அது 2012 ஆம் ஆண்டு ரஸ்யாவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் ஜோர்ஜியாவின் பிரதமர் இரகி கரிபஸ்விலி தெரிவித்துள்ளார்.

தலைநகர் மற்றும் நாடாளுமன்ற வாளாகம் போன்றவற்றில் இடம்பெற்ற போராட்டங்களை தொடர்ந்து அரசு இந்த புதிய சட்டமூலத்தை கடந்த வியாழக்கிழமை (9) மீளப்பெற்றுள்ளது. எனினும் தாம் தொடர்ந்து போராடப்போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்த சட்ட மூலம் தனது மேசைக்கு வந்தால் தான் அதனை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரிக்கப்போவதாக ஜோர்ஜியாவின் அரச தலைவர் Salome Zourabichvili தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.