இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தனது சுயாதீன தன்மையை உறுதி செய்ய வேண்டும்-அருட்தந்தை சக்திவேல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் ஆட்சியாளர்களின் ஒரு துணைக் குழுவாக செயல்பட முனைகின்றதோ? எனும் கேள்வியை கேட்க வைத்துள்ளது.

இவ் ஆணைக் குழுவின் பிரதிநிதிகள் கடந்த பெப்ரவரி மாதம் யாழ் சென்று ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் சந்தித்து விட்டு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இவர்கள் ஒரு தரப்பை மட்டும் சந்தித்தது ஏன்? யாழ் பிரதேசத்துக்கு மட்டும் கட்டுப்படுத்தியது ஏன்? ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சற்று முன் “பொறுப்புக் கூரல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேச பொறிமுறைக்கு வடக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர்.” எனக் கூறியதோடு “உள்நாட்டு பொறிமுறைக்கும் அவர்கள் ஆதரவாக உள்ளனர்” எனக் கூறியிருப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மன நிலையில் இல்லை.மயக்க நிலையில் இருக்கின்றார்கள்.” என சர்வதேசத்துக்கு கூற விரும்புகின்றார்களா? என கேள்வியையும் கேட்கத் தூண்டுகின்றது.

பொறுப்புக் கூறல் தொடர்பாக ஆராய்வது என்பது ஆயுத யுத்தம் தொடங்கப்பட்ட காலத்தோடு அல்லது யுத்த பாதிப்புகளோடு தொடர்புடைய மக்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. அது தமிழர்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகளோடும் அது தொடர்பான பேரினராத ஆட்சியாளர்களின் செயற்பாடுகளுடனும் தொடர்பு பட்ட விடயம் என்பதை அனைவரும் அறிவர்.

அத்தோடு அது வடகிழக்கிற்கு மட்டும் சம்பத்தப்பட்ட விடயம் அல்ல. மலையகம் சார்ந்த விடயமுமாகும்.அங்கு சலன மற்ற இன அழிப்பு மிக நீண்ட காலமாக; அதாவது 1948 ஆம் ஆண்டுக்கு முன்பே அங்கு  ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் வடக்கில் மூடிய நிலையில் குறிப்பிட்ட ஒரு தரப்பை மட்டும் சந்தித்து விட்டு ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன் அதன் அறிக்கையை வெளியிட்டிருப்பது பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. அதனாலேயே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இனவாத ஆட்சியாளர்களின் ஒரு துணைக் குழுவா? என கேட்க வைக்கின்றது.

வடக்கு  கிழக்கு மக்கள் அனுபவித்த யுத்த பாதிப்புகள் என்பதும் மலையகத்தின் நிலவும் சலனமமற்ற இன அழிப்பு என்பதும் நாட்டின் பேரினவாத கருதியலுடனான அரசியல் சம்பந்தப்பட்டது. அதற்கு துணை நிற்கும் அரசியல் யாப்பு சம்பந்தப்பட்டது. அத்தோடு அரச பயங்கரவாதத்தின் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட விடயமுமாகும்.

இதனை விரிவாக ஆராய்வதற்கோ அல்லது தாம் கடந்த காலங்களில் நியமித்த ஆணை குழுக்களின் முன் மொழிவுகளை நடைமுறைப் படுத்துவதற்கோ பேரினவாத ஆட்சியாளர்கள் ஆயத்தம் இல்லை; என்பதே தமிழர்களின் கடந்த கால அனுபவமாகும்.

ஆட்சியாளர்கள் தமிழ் தலைவர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள், விடுதலை இயக்கங்களோடு எடுத்த முடிவுகள், தாமே தீர்வு எனக் கூறிய உப்பு சப்பு இல்லாத விடையங்கள் என்பவற்றை அமல்படுத்த எத்தனிக்ததன் விளைவே தமிழர்கள் யுத்தத்திற்கு தள்ளப்பட்டதும்; நாட்டின் இன்றைய நிலைக்கும் காரணமாகும்.

எனவே பொறுப்புக் குரல் என்பது யுத்த குற்றம் சார்ந்து மீறப்பட்ட மனித உரிமைகள் சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது அரசியல் சார்ந்ததுமாகும். அதனை கையாள்வதற்கு மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இயலாது என்பதும், ஐ.நா மனித உரிமை பேரவைக்கு இயலாது என்பது நாம் அறிந்த விடயமே.

ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், வட்டமேசை கலந்துரையாடல்கள், ஆணை குழுக்கள் என தமிழர்கள் தொடர் ஏமாற்றத்தையே சந்தித்து வந்துள்ளனர். உள்நாட்டு பொறி முறை ஆடசியாளர்களின் கபட திட்டம். இதனாலேயே உள்ளக பொறிக்கு முறைக்கு தமிழர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். எனும் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை ஐநா மனித உரிமை ஆணைக்குழுவை திசை திருப்புகின்ற செயலாக அமைவதோடு, பாதிக்கப்பட்டு தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் தரப்பினரிடையேபிளவை ஏற்படுத்துகின்ற கூற்றுமாகும்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தனது சுயாதீன தன்மையை உறுதி செய்ய வேண்டும்.தமிழர்களின் அரசியலுக்கு,யுத்த பாதிப்புகளுக்கு, அழிவுகளுக்கு நியாயம் தேடுகின்ற செயல் என்பது தனது எல்லைகளை மீறிய செயல் எனது உணர்தலும் வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று செயற்படும் துணிவை ஏற்படுத்திக் கொள்ளவும் வேண்டும். அதுவரைக்கும் எம்மால் தொடர்ந்தும் பொறுத்திருக்க முடியாத நிலையிலேயே நம்பிக்கை வைக்கக் கூடிய சர்வதேச  நிபுணர்களால் அமைந்த பொறிமுறையை தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஐ.நாவினதும் சர்வ தேசத்தின் அமைதிபோக்கும் எமக்கு தொடர் ஏமாற்றத்தையே தருகின்றது.