இலங்கையில் தளம் அமைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை-ஜூலி சங்

இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பதற்கான எத்தகைய நோக்கமும் அமெரிக்காவுக்கு கிடையாது என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரியின் இலங்கை விஜயம் இது தொடர்பானதல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ள அவர், இலங்கையில்  இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு கிடையாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் SOFA உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கோ அல்லது மீளாய்வு செய்வதற்கோ அமெரிக்காவுக்கு எந்த எண்ணமும் கிடையாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஜெடிடியா றோயல் தலைமையிலான உயர் பாதுகாப்புக் குழு வொன்று, கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

அது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள அவர், பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் மேற்கொள்ள வேண்டிய அரசியலமைப்பு மற்றும் கடல்சார் விழிப்புணர்வு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே மேற்படி அதிகாரிகள் குழு இலங்கைக்கு வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.