தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கனடா தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது- சிறிதரன்

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

அதிகாரங்கள் அற்ற ஒரு நிலையில் அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக கனடா தூதுவர் டேவிட் மக்னனிடம் சுட்டிகாட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

கனடா தூதுவர் டேவிட் மக்னன் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவரது அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“கிளிநொச்சியில் எனது அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் மிக முக்கியமாக தொல்பொருள் அடையாளங்கள், காணிபறிப்புக்கள், தமிழ் மக்கள் படுகின்ற வேலைவாய்ப்பின்மைகள், தமிழ் இளைஞர்கள் எதிர் கொள்ளுகின்ற போதைவஸ்துக்கு அடிமையாகின்றமை, நாட்டைவிட்டு வெளியேறுகின்ற எண்ணத்தோடு இளைஞர்கள் இருக்கிறார்களா? அவர்களுடைய நினைவுகள் எவ்வாறு இருக்கின்றது. இரண்டு ஆண்டுகளில் பொருளாதார ரீதியான வளர்ச்சிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக அவர்கள் கேட்டறிந்து கொண்டார்கள்.

அதிலும் குறிப்பாக இலங்கை அரசுக்கும், தமிழ் மக்களிற்கும் இடையிலான இணக்க செயற்பாடுகள், அரசியல் தீர்வு முயற்சியிலே ஏற்பட்டிருக்கின்ற இணக்க முயற்சிகள், மக்கள் என்ன நினைக்கிறார்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து கேட்டார்கள்.

குறிப்பாக குருந்தூர்மலை ஏனைய இடங்களில் காணிகள் சம்பந்தமாக ஏற்படுகின்ற விளைவுகள் அதிலும் வனஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் தொல்பொருள் அடையாளங்கள் என்ற பெயரிலே தொல்பொருள் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகள் இன்னும் மக்களை மிகப்பெரிய அளவிலே பின்தள்ளி செல்கிறது.

மாகாண சபையினுடைய அதிகாரத்திற்குள்ளே இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு செல்கின்றது. வெளியே பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் பற்றி மட்டும் பேசப்படும் போது கல்வி , சுகாதாரம் போன்ற அதிகாரங்கள் பறிக்கப்படுவதனையும், தமிழர்கள் அதிகாரங்கள் அற்ற ஒரு நிலையில் இருப்பது, அரசியல் தீர்வு போன்ற விடயங்களில்  எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

குறிப்பாக ஜெனீவா தீர்மானம் அதற்கு கனடா நாடு செய்துவருகின்ற ஒத்துழைப்புக்கள் நல்லிணக்கத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதில் தங்களுடைய பணி தொடர்ந்தும் இருக்கும். தாங்கள் நியாயபூர்வமான அடிப்படையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் ஆற்ற வேண்டிய அனைத்து பணிகளையும் செய்வோம் என்கின்ற உறுதி மொழியோடு மிக சுமூகமாக இந்த சந்திப்பு நடைபெற்றது” என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கனடா தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது- சிறிதரன்