பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்-IMF

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் இலங்கையர்கள் மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று அம்முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதிய ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத் தலைவர் பீற்றர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதனூடாகவே அனைவரையும் உள்ளடக்கிய,  நிலையான பொருளாதார வளர்ச்சிப்பாதையை நோக்கி இலங்கையால் பயணிக்கமுடியும் என்று  சர்வதேச நாணய நிதிய ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத் தலைவர் பீற்றர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய, இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சில மறுசீரமைப்புக்கள் தொடர்பில் கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள்  வெளிப்படுத்தப்பட்டுவரும் பின்னணியில் இது குறித்து தெளிவுபடுத்தியிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பல வருடங்களாக தொடர்ந்த பொருளாதார நெருக்கடிகள் தவறான கொள்கை தீர்மானங்களை அடுத்து, தற்போது இலங்கை மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கும் தயாராகியுள்ளது.

அதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவ முன்வந்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 4 வருடங்களுக்கென 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வரிக்குறைப்பு மற்றும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் என்பன மிகக் குறைந்த அளவிலான வெளிநாட்டு கையிருப்புடனும் மிக உயர்வான கடன்களுடனும் இலங்கை கொவிட் 19 பெருந்தொற்றுக்குள் பிரவேசிப்பதற்கு வழிவகுத்தது.

அதனையடுத்து மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, மின் துண்டிப்பு, எரிபொருளுக்கான நீண்ட வரிசை உள்ளிட்ட நெருக்கடிகள்  தோற்றம் பெற்றன. இலங்கை, அதன் வரலாற்றில் முதன்முறையாக கடன்களை மீளச் செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்க அனைத்து தரப்பினரும் முன்வந்துள்ளனர்.

அதன்படி, இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் இலங்கையர்கள் மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று அம்முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும். அதனூடாகவே அனைவரையும் உள்ளடக்கிய,  நிலையான பொருளாதார வளர்ச்சிப்பாதையை நோக்கி இலங்கையால் பயணிக்கமுடியும்.

இது இவ்வாறிருக்க, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளின் ஓரங்கமாக இலங்கை அரசாங்கம் பல முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளது. அவற்றில் அரச வருமானத்தை அதிகரித்தல், விலையுறுதிப்பாட்டை ஏற்படுத்துதல், வெளிநாட்டு கையிருப்பை மீளக் கட்டியெழுப்புதல், நிதி உறுதிப்பாட்டை நிலைநாட்டல் என்பன உள்ளடங்குகின்றன.

அதுமாத்திரமன்றி, கடன் மறுசீரமைப்பின்  ஊடாக அவசியமான உதவிகளை வழங்க முன்வருமாறு இலங்கை அதன் கடன் வழங்குநர்களிடம் கோரியுள்ளது. அதேவேளை நெருக்கடி நிலையின்போது வறிய மற்றும் பின்தங்கிய சமூக பிரிவினரே வெகுவாக பாதிப்படைவர். எனவே, வறிய மற்றும் பின்தங்கிய சமூக பிரிவினருக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்குரிய சமூக பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், உயர் வருமானம் பெறுவோரின் பங்களிப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் செயற்றிறன் மிக்க வரி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பின் ஊடாக பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடையத் தொடங்கும். இந்த நெருக்கடி மீண்டும் உருவாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது மிகவும் கடினமான விடயமாகும்.

எனவே, அனைவருக்குமான சுபீட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்தி, நாம் இலங்கை மக்களுடன் தொடர்ந்து நெருங்கி பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.