கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது நிதியமைச்சுக்கு அது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இலங்கைக்கான கடன் மறு சீரமைப்பு தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை நேற்று சீனா சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளதாகவும் எழுத்து மூலமாக அதனை சீனா சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் சீனாவுடன் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தெரிவித்துள்ள திறைசேரியின் செயலாளர் பிரியந்த ரட்நாயக்க, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை 2. 9 பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாகப் பெற்றுக் கொள்வதற்கு சீனாவின் ஆதரவு விரைவாக கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இத்தகைய பின்னணியிலேயே கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான சீனாவின் நிலைப்பாடு நேற்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஆதரவை இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் 16ஆம் திகதி எழுத்து மூலம் கையளித்துள்ள நிலையில் சீனா நேற்று தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கம் தொடர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இறுதி உடன்பாட்டை மேற்கொள்வதற்கு இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் ஆதரவை இலங்கை எதிர்பார்த்திருந்தது.
அதற்கிணங்க கடந்த 16ஆம் திகதி இந்தியாவின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் சீனாவின் உடன்பாட்டை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது. அதற்கமைய சீனாவும் நேற்றைய தினம் அதன் நிலைப்பாட்டை சர்வதேச நாணயநிதியத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.