இந்தியாவில் சுமார் 90 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர்: இந்திய உள்துறை அமைச்சகம்

இந்தியாவில் சுமார் 90 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள்

தமிழ்நாட்டில் உள்ள 108 அகதி முகாம்களில் 58,843 இலங்கைத் தமிழ் அகதிகளும், முகாம்களுக்கு வெளியே 34,135 இலங்கை அகதிகளும், ஒடிசாவில் 54 இலங்கை அகதிகளும் வாழ்ந்து வருவதாக இந்திய உள்துறை அமைச்சகம் 2020-21 ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் 72,312 திபெத்திய அகதிகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, ஜூலை 1983 முதல் ஓகஸ்ட் 2012 வரையிலான காலப்பகுதியில் 3,04,269 இலங்கை அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

அவ்வாறு இந்தியாவுக்குள் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் இறுதி நோக்கத்துடன் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே இந்திய அரசின் அணுகுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1995ம் ஆண்டு வரை 99,469 அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அதன் பிறகான காலத்தில் திட்டமிடப்பட்ட வகையிலான திருப்பி அனுப்பும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சில அகதிகள் அவர்களாகவே இலங்கைக்கு திரும்பி விட்டனர் அல்லது சிலர் வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News