நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: ரணில் வலியுறுத்தல்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி நடத்திய அவரச செயற்குழு கூட்டங்களின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது சுமார் பதினொரு இலட்சம் வழக்குகள் தேங்கிப்போயுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் நீதிமன்றங்கள் அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலேயே அதிகப்படியான வழக்குகள் தேங்கியுள்ளன.

நாட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதாக இருந்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் வழக்குகளையாவது விசாரித்து முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், இவ்வாறான பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று அவசியமாகும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தால் அதற்காக மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டியது கட்டாயமாகும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் தங்களால் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, தமக்கு தனிப்பட்ட நபர்கள் மீது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தங்களது போராட்டம் கொள்கை ரீதியானது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாட்டு மக்களின் உரிமைகளை மக்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மக்களின் அந்த ஜனநாயக உரிமைகளை யாராவது திருட முற்பட்டால் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.