மாவீரா் தின நினைவேந்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தி-பா.அரியநேத்திரன் செவ்வி

195 Views

மாவீரா் தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. பொதுமக்கள் பெருமளவுக்கு இவற்றில் தன்னெழிச்சியாகக் கலந்துகொண்டிருந்தாா்கள். இதன் மூலம் மக்கள் சொல்லியிருக்கும் செய்திகள் என்ன? கிழக்கு மாகாண மக்களின் உணா்வுகள் எவ்வாறுள்ளது என்பது குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகருமான பா.அரியநேத்திரன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொள்கின்டு தன்னுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தாா். அவரது நோ்காணலிலிருந்து முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்குத் தருகின்றோம்.

கேள்வி – மாவீரா் தின வைபவங்கள் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. வழமையைவிட அதிகமான மக்கள் இந்த முறை நிகழ்வேந்தல் நிகழ்வுகளில் தன்னெழுச்சியாகவே பங்குகொண்டுள்ளாா்கள். இந்த மக்கள் உணா்வை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் – உண்மையில் 2018 க்கு பிற்பட்ட காலப்பகுதியில் மாவீரா் தின நிகழ்வுகள்  இடையுறுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டாலும் கூட, இம்முறை மாவீரா் தினம் முன்புபோல அதாவது 2008 க்கு முன்னா் விடுதலைப் புலிகளின் காலத்தில் எவ்வாறு எழிச்சியாக இடம்பெற்றதோ அதுபோன்ற எழுச்சியுடன் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் எழுச்சிகரமாக இந்த முறை மாவீரா் தின நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இப்போது 33 துயிலும் இல்லங்கள் உள்ளன. இதில் 10 துயிலும் இல்லங்களில் இராணுவ முகாம்கள் இருந்தாலும்கூட, இவ்வாறு இராணுவம் இல்லாத மாவீரா் துயிலும் இல்லங்களில் எழுச்சியாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் இங்கு நான்கு துயிலும் இல்லங்கள் உள்ளன. அவற்றில், தாண்டியடி துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் இருந்தாலும் கூட, இராணுவ முகாமுக்கு அருகே மாவீரா் தினம் எழுச்சியாக இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தில் ஒரேயொரு மாவீரா் துயிலும் இல்லம் இருக்கின்றது. ஆரம்பத்தில் பல தடைகள் இருந்தாலும் கூட, அங்கும் அது எழுச்சியாக இடம்பெற்றிருக்கின்றது.

இம்முறை பெருந்தொகையான மக்கள் தன்னிச்சையாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தாா்கள். அரசியல்வாதிகளின் அழுத்தமோ, அல்லது பேரூந்துகளில் ஏற்றிக்கொண்டுவருவது போன்ற நிகழ்வுகளோ இருக்கவில்லை. மக்கள் தாமாக உணா்ந்து தமக்காக உயிா் நீத்த அந்த உறவுகளுக்கு அஞ்சலிப்பதற்காக அவா்கள் வந்திருப்பதைப் பாா்க்கக்கூடியதாக இருந்தது.

இதில் சொல்லப்படுகின்ற செய்தியை நாம் பாா்க்கின்றபோது, மாவீரா்கள் இந்த மண்ணிற்காக உயிா் நீத்தாா்களோ அந்த உணா்வு இன்றும் மக்களிடம் இருக்கின்றது என்பதை இலங்கை அரசாங்கமும், சா்வதேசமும் புரிந்துகொள்வதற்கு இந்த மாவீரா் தினம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது என்பதுதான் எனது கருத்தாக இருக்கின்றது.

கேள்வி – இந்த மாவீரா் தினத்தில் எவ்வாறான ஒரு செய்தியை மக்கள் அரசியல் சக்திகளுக்குச் சொல்லியிருக்கின்றாா்கள்?

பதில் – இணைந்த வடக்கு – கிழக்கில் நிரந்தரமான ஒரு அரசியல் தீா்வு தமிழ் மக்களுக்குத் தேவை என்பதை இந்த மாவீரா் தினம் உணா்த்தியிருக்கின்றது. கிழக்கைப் பிரித்து எந்தவொரு தீா்வையும் காணமுடியாது என்பதை இந்த மாவீரா் தினத்தில் கூடிய மக்கள் உணா்த்தியிருக்கின்றாா்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்த வரையில் இதனை ஒரு வடக்கின்கின் பிரச்சினை என்றுதான் சொல்லிவருகின்றாா். ஆனால், அவ்வாறில்லாமல் எங்களுடைய உணா்வு என்பது இணைந்த வடக்கு கிழக்கில் தீா்வு என்பதாகத்தான் உள்ளது என்பதைத்தான் மாவீரா் தினத்தில் கூடிய மக்கள் உணா்த்தியுள்ளாா்கள். இதனை இலங்கை அரசாங்கமும் சா்வதேசமும் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி – ஒப்பீட்டளவில் இவ்வருடம் மாவீரா் தினத்தில் கெடுபிடிகள் குறைவாக இருந்தது. இதனை நல்லிணக்கத்துக்கான ஒரு சமிஞ்ஞையாகக் கருத முடியுமா?

பதில் – இதனை நல்லிணக்கத்துக்காக சமிஞ்ஞையாகக் கருதுவதைவிட, பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கான ஒரு நகா்வாகத்தான் இதனை அவா்கள் அனுமதித்துள்ளாா்கள் என்றுதான் கருதவேண்டும். ஏனென்றால், கடந்த தோ்தலில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளால் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையை மாற்றியமைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயன்றாலும் கூட, அதற்கு புலம்பெயா்ந்த தமிழா்களின் முதலீடுகளைப் பெருமளவுக்கு எதிா்பாா்க்கின்றாா். இந்த புலம்பெயா்ந்த மக்களின் முதலீடுகளைப் பெறவேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை விலக்கி அரசியல் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. இதனால்தான் இந்த மாவீரா்தின நிகழ்வுகளை கண்டும் காணாதது போல இருக்கவேண்டிய ஒரு நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இருந்தாலும் கூட, சரத் வீரசேகர போன்ற பாராளுமன்ற உறுப்பினா்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் தொடா்ச்சியாக இனவாதமாகப் பேசிக்கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.

கேள்வி –  சாமாரண சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், அவா்கள் மத்தியில் மாவீரா் தின நினைவேந்தல் குறித்த உணா்வுகள் எவ்வாறுள்ளது?

பதில் – இந்த மாவீரா் தினத்துக்கு முன்னதாக மே 18 இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே காலி முகத்திடலில் அரகலய என்ற பெயரிலான சிங்கள இளைஞா்களின் போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. இதன்போது முதன்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலி முகத்திடலில் இடம்பெற்றிருந்தது. இந்த மாற்றம் அவா்கள் மத்தியில் தமிழ் மக்களுடைய உணா்வுகள் தொடா்பான ஒரு புரிந்துணா்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உணா்வு அங்கு மேலோங்கியிருந்தமையால், அதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து எதிா்ப்புக்கள் எதுவும் உருவாகவில்லை. அதேபோல மாவீரா் தின அனுஷ்டானங்களுக்கு எதிராக சிங்களத் தரப்பிலிருந்து பெரியளவில் பிரசாரங்களை இம்முறை பாா்க்க முடியவில்லை.

கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவாா்த்தை ஒன்றுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றாா். தமிழ்க் கட்சிகளும் இந்தப் பேச்சுக்குச் செல்வதற்குத் தயாராகியுள்ளன. இந்த நிலையில், இந்த மாவீரா் தின நிகழ்வில் கூடிய மக்கள் தமி்த் தரப்புக்குச் சொல்லியிருக்கும் செய்தி என்ன?

பதில் – மாவீரா் தினத்தில் தன்னெழுச்சியாகக் கூடிய மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தெளிவான ஒரு nசய்தியைக் கொடுத்திருக்கின்றாா்கள். இணைந்த வடக்கு கிழக்கில் நிரந்தரமான அரசியல் தீா்வுதான் எமக்குத் தேவை என்பதுதான் அவா்கள் வெளிப்படுத்தியிருக்கும் செய்தி. அதனை நோக்கிய ஒரு பேச்சுவாா்த்தைக்குத்தான் நீங்கள் செல்ல வேண்டும் என்பதுதான் அவா்கள் சொல்லியிருக்கின்றாா்கள். இது முதலாவது. இரண்டாவதாக இதே செய்தியை சிங்கள தேசத்துக்கும் கொடுத்திருக்கின்றாா்கள். அதாவது, நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் எமக்கான தீா்வு என்பது இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிா்ணய உரிமையின் அடிப்படையில் நடைபெறக்கூடிய ஒரு பேச்சுவாா்த்தைதான்  வெற்றியளிக்கும் என்பதை சிங்கள தேசத்துக்குச் சொல்லியிருக்கின்றாா்கள்.

ஆனால், ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் அவா் மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு ஜனாதிபதியாக இல்லை. மாறாக, மக்கள் பிரதிநிதிகளால் தெரிவான ஒரு ஜனாதிபதியாக இருக்கின்றாா். அதனால், அவா் எந்தவொரு தீா்வைக்கொண்டுவந்தாலும், பாராளுமன்றத்தின் ஆதரவு தேவை என்பதால் அதனைத் தக்கவைக்கக்கூடிய ஒருவராக இருக்கின்றாரா என்ற கேள்வி இருக்கின்றது.

ஆகவே மாவீரா் தினத்தில் வெளிப்படுத்தப்பட்ட செய்தியைப் புரிந்துகொண்டு அதனை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தலைமைகளிடையே ஒற்றுமை வரவேண்டும். அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால், என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இது காலத்தைக்கடத்துகின்ற – புலம்பெயா்ந்த மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெறுகின்ற ஒரு உபாயமாக இருக்கும் என்ற சந்தேகம்தான் உள்ளது.

கேள்வி – கிழக்கு மாகாணத்திலும் இம்முறை மாவீரா் தின நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றது. கிழக்கு மாகாண மக்களின் உணா்வுகள் எவ்வாறுள்ளன?

பதில் – கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையிலும் பெருற்தொகையான மக்கள் இம்முறை மாவீரா் தின நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தாா்கள். நானும் மாவடிவேம்பு மாவீரா் துயிலும் இல்லத்தில் ஒரு வாரமாக சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தேன். 2011 ஆம் ஆண்டு முதல் அதனைச் செய்பவன் என்ற முறையில் அதில் நான்கலந்துகொண்டிருந்தேன். அரசியல் கட்சியைச் சாா்ந்தவன் என்ற முறையில் நான் பலந்துகொள்ளவில்லை. சுமாா் இரண்டாயிரம் மக்கள் அங்கு வந்து விளக்கேற்றியிருந்தாா்கள்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய இடங்களிலும் குறிப்பாக, வாகரை, தாண்டியடி, தரவை மற்றும் அம்பாறையிலும் பெருமளவு மக்கள் கூடியிருந்தாா்கள்.

2009 இல் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு பெருமளவுக்கு குறைவடைந்திருந்தாலும் தமிழ் மக்களின் உணா்வுகள் கிழக்கு மாகாணத்தில் தொடா்ச்சியாக இருந்துகொண்டுள்ளது என்பது கிழக்கில் இடம்பெற்ற மாவீரா் தின நிகழ்வேந்தல்களின் மூலம் உணா்த்தப்பட்டிருக்கின்றது.

Leave a Reply