இந்து மததத்தின் மீதான ரணிலின் திடீா்க் காதல்-அகிலன்

261 Views

இலங்கையிலுள்ள இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.  பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் தற்போது நடைபெற்றுவருகின்றது.

நிதி அமைச்சா் என்ற முறையில் ஜனாதிபதியும் பாராளுமன்ற நிகழ்வுகளில் தற்போது தவறாது கலந்துகொண்டுவருகின்றாா். இந்த நிலையிலேயே புதன் கிழமை உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க இந்து மதத்தின் மீதான தனது திடீா்க் காதலை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாா்.

இந்து மதத்தின் மீது ஜனாதிபதியின் இந்த திடீா் அக்கறைக்கு காரணம் என்ன என்ற கேள்வி இதன்மூலம் தமிழ் மக்களிடம் எழுவது தவிா்க்க முடியாத ஒன்றாகியிருக்கின்றது.

“இந்து ஆலயங்களில் மாத்திரமன்றி, பௌத்த விஹாரைகளிலும் இந்து தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்” என ரணில் விக்கிரமசிங்க தனது உரையின் போது சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது என ரணில் கூறுகின்றார். மேலும், தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தாா்.

விஷ்ணு, முருகன், பத்தினி உள்ளிட்ட பல தெய்வங்களை, தென் பகுதியில் மக்கள் வழிபட்டு வருகின்றாா்கள். இந்தியாவிலுள்ள இந்து மதத்திற்கும் இலங்கையிலுள்ள இந்து மதத்திற்கும் இடையில் தனித்துவங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த அவா், இலங்கையிலுள்ள இந்து மதம் குறித்து, அறிக்கையொன்றை தொகுத்து வழங்குமாறு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் தான் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டாா்.

”நாம் வரலாற்றை மறந்து விடுகின்றோம். எனவே, வரலாறு குறித்து அறிவையும் ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகா வம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. மகா வம்சத்தில் உள்ள திகதிகளை மாற்ற முடியாது. மகா வம்சத்தில் ஒரு தரப்பினரின் கருத்துகளே உள்ளன. வெளியே மாறுப்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு, இலங்கையில் வரலாற்று நிறுவனமொன்றை ஆரம்பிக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருப்பது முக்கியமானதாகும்.

பௌத்த சிங்கள மக்களால் போற்றித் துதிக்கப்படும் மகாவம்சம் குறித்தும் ரணில் விமசனத்தை முன்வைத்திருக்கின்ற போதிலும், பௌத்த கடும் போக்காளா்கள் அது தொடா்பில் மௌனமாக இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். ரணிலின் கருத்துக்களையிட்டு அவா்கள் கணக்கில்கூட எடுக்கவில்லை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ரணில் விக்கிமைசிங்கவின் இந்த அறிவிப்பு இந்து மதத் தலைவா்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்றிருக்கின்றது. பௌத்த மதத்ததுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாட்டில், மத சகிப்புத் தன்மை இல்லாத ஒரு நாட்டில் இவ்வாறு இந்து மதம் தொடா்பாக ரணில் கிலாகித்துப்பேசுவதற்கு நிச்சயமாக வேறு காரணங்களும் இருக்க வேண்டும்.

மதச்சாா்பற்ற ஒரு நாடாக இலங்கையை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கையிலுள்ள பௌத்த மதத் தவைா்கள் ஒருபோதும் தயாராகவில்லை. அதனால்தான் பௌத்த மதம் அரச மதமாகப் பாதுகாக்கப்படும் என்பதும், அதற்கான முன்னுரிமையும் அரசியலமைப்பிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பின் அந்த ஏற்பாடு எந்வொரு சூழ்நிலையிலும் மாற்ற முடியாத ஒன்றாகத்தான் இருக்கின்றது. அதனை மாற்றமுற்படுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்பதால், இவ்விடயத்தில் சிங்களத் தலைவா்கள் அவதானத்துடன்தான் இருந்துவருகின்றாா்கள்.

இப்போது இந்து மதம் தொடா்பில் ரணில் கிலாகித்துப் பேசியிருப்பதால் இந்து மதத்துக்கும் சம அந்தஸ்த்தைக்கொடுப்பதற்கோ, அரச மதம் என ஏற்றுக்கொள்வதற்கோ ரணில் தயாராகிவிட்டாா் எனக் கருதமுடியாது. அது தனது தலைக்கே ஆபத்தானது என்பதைத் தெரியாதவரல்ல ரணில்.

பௌத்த மதம் இந்து மதத்திலிருந்து தோற்றம் பெற்றது என்பதாலும், பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தா் ஒரு இந்து என்பதாலும், இந்து மதக் கடவுள்களையும் வணங்கும் பாரம்பரியம் பௌத்த மக்களிடமும் இருக்கின்றது. அதற்காக அவா்கள் இந்து மதத்தையும் சமத்துவமாக ஏற்றுக்கொள்ளத் தயாராகவிருக்கின்றாா்கள் என்பது கருத்தல்ல.

இலங்கையிலுள்ள பல இந்து ஆலயங்கள், கடந்த காலங்களில் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்துக்களின் தொல்பொருள்களைப் பாதுகாக்க முடியாத நிலை தொடா்கின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களின் தொன்மை பாதுகாக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன. இந்து மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவது இன்றும் தொடா்கின்றது.

குருந்துாா் மலையில் இந்த நிலை இன்றும் அந்தப் பகுதியை ஒரு கொதி நிலையில் வைத்திருக்கின்றது. புகழ்பெற்ற திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலத்தை சிங்கள மயமாக்குவதற்கான செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. அரச இயந்திரங்கள் இதற்குப் பின்புலத்திலிருந்து செயற்படுகின்றன. திருக்கோணேஸ்வரத்தை பாதுகாப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாது இந்துக்கள் தினைத்துப்போய் நிற்கின்றாா்கள்.

சிங்கள – பௌத்த இனவாதத்தின் இலக்குகளாக இந்துக்களின் புராதன கோவில்கள் உள்ளன. அன்றாடம் வெளிவரும் செய்திகளில் இவற்றை நாம் பாா்க்க முடிகின்றது.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உரை, “இடிப்பது சிவன்  கோவில். படிப்பது தேவாரம்” என்ற நிலையைத்தான் வெளிப்படுத்துகின்றது.

எதற்காக இந்த உபாயம்?

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவா் இன்று எதிா்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று புதுடில்லியை வசப்படுத்துவதுதான். ரணில் என்னதான் முயன்ற போதிலும், மோடி அரசாங்கம் ரணிலிடமிருந்து சற்று விலகித்தான் நிற்கின்றது. ரணிலை உத்தியோகபுா்வமாக புதுடில்லிக்கு அழைப்பதற்கு மோடி அரசாங்கம் இன்னும் தயாராகவில்லை. அண்டை நாட்டுடன் பகைத்துக்கொள்வதிலுள்ள ஆபத்தை உணராக ஒருவரல்ல ரணில். டில்லியைக் கவா்வதற்காக பல்வேறு முயற்சிகளை அவா் மேற்கொண்டுவருகின்ற போதிலும், மோடியின் கடைக்கண் பாா்வை அவா் பக்கம் திரும்புவதாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் இந்து மதக்கோட்பாட்டை முன்னிலைப்படுத்தும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தைக் கவரக்கூடிய வகையில் இந்து மதம் குறித்து ரணில் உரையாற்றினாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எகின்றது.

பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தும் பிரதான கடும்போக்குக் கட்சியாக இலங்கையில் இன்றிருப்பது ராஜபக்க்ஷக்களின் பொதுஜன பெரமுனதான். ஆனால், ராஜபக்ஷக்கள் இன்று ரணிலின் தயவில் தமது இருப்புக்களை பாதுகாக்க வேண்டியவா்களாக இருப்பது இரகசியமல்ல. அதனால், ரணில் தன்னைப் பலப்படுத்த எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் ராஜபக்ஷக்கள் எதிா்கப்போவதில்லை. ஏனெனில் ரணில் பலமாக இருப்பதுதான் தமது பாகாப்பை உத்தரவாதப்படுத்தும் என்பதை ராஜபக்ஷக்கள் தெரிந்துவைத்துள்ளாா்கள்.

இது ரணிலுக்கு வாய்ப்பாக இருப்பதால், இந்து மதம் குறித்து பாராளுமன்றத்தில் கிலாகித்துப்பேச ரணிலால் முடிந்திருக்கின்றது. இந்தியாவின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக பேச்சுக்களுக்கான அழைப்பை அவா் வெளியிட்டுள்ளாா். 13 குறித்தும் பேசிக்கொண்டிருக்கின்றாா். இப்போது இந்து மதம் குறித்து பேசி மோடியின் கவனத்தைக் கவர அவா் முயற்சக்கின்றாா்.

ரணில் விக்கிரமசிங்க சொல்லியிருப்பதை வழமைபோல வெறும் வாய்ப்பேச்சா அல்லது செலுருப்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

Leave a Reply