ஈழத்தமிழரின் இறைமையையும் வெளியக தன்னாட்சி உரிமையையும் மறுக்கும் சம்பந்தரின் இயலாமைப்பிரகடனம்
இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் சார்பில் அதன் தலைவர் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் பிரித்தானிய காலனித்துவ உயர்அதிகாரி ஹோல் அவர்களிடம் 03.11.1945 இல் கையளித்த மனுவில் தமிழர்கள் இலங்கையில் தனியான அரசியல் அலகு என்பதையும் இலங்கையின் மூத்த குடிகளான அவர்கள் தனியான ஆட்சியைக் கொண்டு விளங்கி இலங்கையின் தேச உருவாக்கத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் வளர்ச்சிகளுக்கும் தங்களாலான பங்களிப்புக்களை வழங்கினார்கள் என்பதால் இலங்கை முழுவதிலும் சமமானதன்மை கொண்ட மக்கள் என்பதையும் வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்து விளக்கி, ஈழத்தமிழர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் தொகை அவர்களின் தனியான அரசியல் அலகுத்தன்மையை உரிய முறையில் வெளிப்படுத்தக் கூடிய முறையில் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கூடவே மலையகத் தமிழர்கள் 750000 பேரும் இலங்கையின் குடிமக்கள் அவர்களில் 80 வீதமானவர்கள் இலங்கையிலேயே பிறந்தவர்கள் ஆதலால் அவர்களது அரசியல் உரிமைகளும் உரிய முறையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையால் உறுதிப்படுத்தப்பட்டு இலங்கையில் தமிழர்களுக்கான அரசாங்க முறைமை சரியான வகையில் கட்டமைக்கப்பட வேண்டுமென பிரித்தானியாவுக்கு மனுக்கையளித்தார் என்பதை காலனித்துவ அலுவலகத்தின் Co54/987/ 1, no 96 இலக்கப்பதிவு உறுதி செய்கிறது. இதன் தொடர்ச்சியாக 15.01.1946இல் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் செயலாளரான எஸ் சிவசுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானியாவின் அன்றையப் பிரதமர் அட்லி அவர்களுக்கு அனுப்பிய மனுவில் தொழிற்கட்சி சிறுதேசியங்களின் தன்னாட்சி உரிமையை உலகளவில் பேணுகின்ற நிலையில் தமிழர்களுக்கும் அவர்களது தன்னாட்சி உரிமையை ஏற்று தீர்வு வழங்குமாறு கோரியிருந்தார் என்பதை CO54/986/9/1, no 9, இலக்க காலனித்துவ அலுவலகப் பதிவு உறுதி செய்கிறது.
இந்நிலையில் சரியாக 77 ஆண்டுகளின் பின்னர் இன்று அமரர் ஜி ஜி பொன்னம்பலத்தின் பேரனும் இன்றைய ஈழத்தமிழ்த் தலைவர்களுள் இளமையானவருமான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் ஈழத்தமிழ்மக்களின் தன்னாட்சி உரிமையைப் பேணும் வகையில் ரணிலின் பேச்சுவார்த்தை முயற்சி இல்லை மாவட்ட அபிவிருத்தி சபைகளைத் திணித்து, ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ராசபக்ச குடும்பத்தின் பேரினவாதக் கனவை நனவாக்கும் அரசியல் உத்தி என்பதை வெளிப்படுத்தியுள்ளது. “வரப்போகின்ற இந்தத் தீர்வு என்ற பேரிலே நடைபெறப்போகின்ற சதியைத் தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சமஷ்டியைத்தான் கொண்டு வருகிறோமெனச் சொல்லிக் கொண்டு மீண்டுமொருமுறை தமிழ்மக்களாகவே ஒற்றையாட்சிக்குரிய ஒப்புதலை விரும்பிக் கொடுக்க வைக்கின்ற ஒரு மோசமான துரோகம் ஒன்று அரங்கேற இருக்கின்றது என்பதை எம்முடைய மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்” என்ற எச்சரிப்பை உரிய நேரத்தில் உரிய முறையில் அவர் விடுத்துள்ளார். அத்துடன் “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பேச்சுவார்த்தை என்று நடத்துகின்ற நாடகத்துக்கு ஓர் அங்கீகாரத்தைத் கொடுப்பதற்காகவே தமிழ்க்கட்சிகள் அவசரப்படுகின்றன. எல்லோரும் தன்னுடன் பேசுவதால் தனக்கொரு அங்கீகாரத்தைக் கொடுக்கிறார்கள் என்று அனைத்துலக மட்டத்தில் தனது தலைமைத்துவத்துக்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியில் இருந்து தப்புவதற்கு ரணிலால் நடத்தப்படப் போகிற நாடகத்தில் தமிழ்க்கட்சிகள் அவசரப்பட்டு கலந்து கொள்ள முற்படுவது ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையப்போகிறது” எனவும் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் மக்களுக்குத் தெளிவாக்கியுள்ளார்.
இந்நிலையில் இவ்வாண்டு மாவீரர் நாளில் ஈழத்தமிழ் மக்கள் தேசமாகத் திரண்டெழுந்த உண்மையின் தரிசனத்தாலும் கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய உரையாலும் கலங்கி நிலைகுலைந்து போன திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் அவர்கள் தானும் தனது கட்சியும் தப்புவதற்கான ராஜதந்திரமாக இயலாமைப்பிரகடனம் ஒன்றை இந்தியாவின் ‘புரொன்ட்லைன்’ மாதஇதழுக்கான செவ்விவழியாகச் சிறிலங்காவின் ஒற்றையாட்சிக் கனவை நனவாக்கும் வகையில் அளித்துள்ளார். “கானல் நீர் கனவாகிறது பேச்சின் மூலமான தீர்வு” என இயலாமைப் பிரகடனம் செய்து “அனைத்துலக அழுத்தம் வேண்டும்” என அழைப்பு விடுத்த சம்பந்தர் மிகவும் நுட்பமான முறையில் அந்தத் தலையீடு ராசபக்ச ரணில் கூட்டு நோக்கான ஒற்றையாட்சிக்குள் தமிழரின் அரசியல் பணிவைப் பெற வைத்தல் என்பதை அனைத்துலக அழுத்தத்தால் செய்விக்கின்ற ஒன்றாக நிறைவு செய்துள்ளார். இதன்வழி கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் தேசிய விழிப்புணர்வு உரைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களின் ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வு துன்பமே தரும் என்னும் தத்துவ விளக்கத்திற்கும் எதிர்வினையாற்றி சிறிலங்காவைக் காப்பாற்றும் செயலை மிகச்சிறப்பாகச் அவர் செய்துள்ளார். “நாடு எந்த வகையிலும் துண்டாடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பிரிக்கப்படாத இலங்கையில் நிற்கின்றோம். அதே சமயம் இப்படியே போக முடியாது இவ்விடயத்தை நன்கறிந்த சர்வதேச சமுகத்தை அணுகுவதைத் தவிர எமக்கு மாற்றுக்கருத்தில்லை. இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்துலக சமூகம் தலைமை தாங்கி வடக்கு கிழக்குக்குச் சில ஏற்பாடுகளைச் செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்னும் அவரின் உரை ஈழத்தமிழர்களின் இறைமையையும் வெளியக தன்னாட்சி உரிமையினையும் மறுக்கும் அனைத்துலக பிரகடனம். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2022 டிசம்பருக்கான தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில் இவ்வாண்டு டிசம்பர் 10 இல் இடம்பெறும் 75வது அனைத்துலக மனித உரிமைகள் நாளில் அதன் மையக் கருத்தான “அனைவருக்குமான தன்மானம், விடுதலை, நீதி” ஈழத்தமிழருக்கும் இந்தியாவால் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை தோன்றியுள்ள நேரத்தில் அதனை சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் செய்யுமாறு இந்திய இதழ் வழியாக வலியுறுத்தும் சம்பந்தர் ஈழத்தமிழர்கள் தங்களின் சொந்த மண்ணில் வாழ விரும்புவதை எவ்வாறு பிரிவினை எனச் சிங்கள பௌத்த பின்னணியில் அனைத்துலக மயப்படுத்தியுள்ளார் என்பதை அவரின் உரையினை நுட்பமாக வாசித்தால் விளங்கும். 2009க்குப் பின் சிங்கக் கொடியைத் தலைக்கு மேல் தூக்கிப்பிடித்து யாரும் கேட்காமலே ஈழத்தமிழினம் சிங்களத்துக்கு அடிமை என்று எவ்வாறு சம்பந்தர் பிரகடனம் செய்தாரோ அவ்வாறே இன்றைய இயலாமைப்பிரகடனமும் ஒற்றையாட்சிக்குள் ஈழத்தமிழரை அமுக்கி அவர்களின் இறைமையையும் வெளியக தன்னாட்சி உரிமையையும் மறுக்கும் இன்னொரு சிங்கள பௌத்த பேரினவாத ஆதரவு நடவடிக்கையே என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது.