கோட்டா அரசின் செயற்பாடானது வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி – குரலற்றவர்களின் குரல் அமைப்பு

தற்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசின் செயற்பாடானது வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி என்பதைப் பறைசாற்றுகின்றது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் தெரிவித்தார்.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை அழைப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

05.05.2022 Letter Komagan

மேலும் கடந்த 30ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பானது நீண்ட காலமாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் அடிக்கடி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே பல தடவைகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கொழும்பில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரம் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை இந்த நாட்டில் வடக்கு கிழக்கிற்கு ஒரு நீதி தெற்கு ஒரு நீதி என்பதைப் பறைசாற்றுகின்றது.

குறிப்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் ஆகிய நான் பல தடவைகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன். எனவே எனது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாகவே இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன் என்றார்.

Tamil News