இலங்கை : பிசுபிசுக்கும் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான போராட்டங்கள் 

பிசுபிசுக்கும் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான போராட்டங்கள் : அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் நோக்கில் காலி முகத்திடலிலும்,  பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்பாகவும் தொடர்ச்சியாக இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த 28 ம் திகதி வியாழக்கிழமை  அனைத்து தொழிற்சங்க போராட்டம் காரணமாக இலங்கை ஸ்தம்பித்ததோடு அரசாங்கத்தின் மீதான அழுத்தமும் அதிகரித்தது.எனினும் ராஜபக்ஷ அரசாங்கம் இதற்கு மசிந்து கொடுக்காத நிலையில் நாளை 06 ம் திகதி வெள்ளிக்கிழமை மற்றொரு தொழிற்சங்க போராட்டத்தை தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

இப்போராட்டம் கடந்த வாரம் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டத்தைக் காட்டிலும் மிகவும் வலுவானதாக இருக்கும் என்றும் இதற்கும் ராஜபக்ஷாக்கள் மசிந்து கொடுக்காத நிலையில் எதிர்வரும் 11 ம் திகதி புதன்கிழமை முதல் தொடர்ச்சியாக ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை  இப்போது எல்லா துறைகளிலும் மெதுவாக மூழ்கிக் கொண்டிருக்கின்றது.ஏற்றுமதி வருவாய்கள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் ஆடைத்தொழிற்சாலை, சுற்றுலா பயணிகள் மூலமான வருவாயும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.இந்நிலையில் நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை பொருட்களின் இறக்குமதியை வெகுவாக பாதித்துள்ளது.இதனால் எரிபொருள், எரிவாயு, பால்மா உட்பட்ட பல பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதுடன் பொருட்களின் விலைகள் மூன்று அல்லது நான்கு மடங்காக அதிகரித்துள்ளன.போக்குவரத்து கட்டணங்களும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.இவற்றுக்கும் மத்தியில் நாட்டு மக்கள் பசி, பட்டினி என்பவற்றுடன் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாட்டின் இன்றைய  வங்குரோத்து நிலைமைக்கு சமகால ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளே காரணம் என்ற‌ நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கியும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதேவேளை அரசாங்கத்தின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் சீனா, இந்தியா போன்ற நாடுகள் மேலும் மேலும் கடன்களை வழங்கி இலங்கையை வசப்படுத்த முயன்று வருகின்றன.

இதனடிப்படையில் 300 மில்லியன் யுவான்களை சீனா விரைவில் இலங்கைக்கு வழங்கவுள்ளது. ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற பல விடயங்கள் இவ்வுதவிகளுக்குள் மறைந்திருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜபக்ஷாக்களின் ஆட்சியை மழுங்கடித்து நாட்டின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் நோக்கில் இளைஞர்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

நாடளாவிய ரீதியில் இப்போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில்,  அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

மேலும் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  இளைஞர்கள் இனவாதத்தை தோற்கடிக்கும் செயற்பாடுகள் பலவற்றிலும் ஈடுபட்டு வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மதகுருமார்களும் இதற்கு தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற நிலையில் இது ஒரு முன்மாதிரியான செயற்பாடு என்று பலரும் பாராட்டினர் வருகின்றமையும் நோக்கத்தக்கதாகும்.

ராஜபக்ஷாக்களுக்கு எதிராக கடந்த 28 ம் திகதி  இங்கு இடம்பெற்ற போராட்டம் இலங்கையின் வரலாற்றில் அதிகளவான மக்கள் பங்குகொண்ட ஒரு வலுவான போராட்டம் என்று சித்திரிக்கப்படுகின்றது. 1980 ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டமே இது காலவரை வலுவான போராட்டமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 28 ம் திகதி   போராட்டமானது இதனை விஞ்சியிருக்கின்றது.இதனிடையே தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை (06) ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததுள்ளன.

கல்வித்துறைசார் ஊழியர்களும் இதற்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நிறுவனங்களை மூடி கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு ஆதரவினை வெளிப்படுத்தவுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பல தரப்பினர்களினதும் ஒத்துழைப்பில் நாளைய போராட்டம் மிகவும் வலுவானதாகவும் அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை இளைஞர்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

என்னதான் போராட்டங்கள் இடம்பெற்ற போதும் ராஜபக்ச அரசாங்கம் இது தொடர்பில் கரிசனை செலுத்துவதாக இல்லை. பிரதமர் மஹிந்த தான் “ஒரு போதும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை“ என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாயவும் பதவி விலகுவது தொடர்பில் எவ்வித அறிவித்தலையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய  இன்று 80 மேலதிக வாக்குகளால் பிரதி சபாநாயகராக பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்நிலைமையானது ஆளுங்கட்சியின் பலத்தை நிரூபிப்பதாக உள்ளது.

இதனிடையே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையும் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றி தோல்வியை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. எவ்வாறெனினும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பிசுபிசுத்து வருவதையே அவதானிக்க முடிகின்றது.

Tamil News