முடக்கப்பட்ட சமூகம்- துரைசாமி நடராஜா

ஒரு சமூகம் மேலெழும்புவதற்கு பொருளாதார ரீதியான அபிவிருத்தி உந்துசக்தியாக விளங்குகின்றது. இதன் சாத்தியப்பாடுகள் பல்துறை அபிவிருத்திக்கும் தோள் கொடுக்கின்றன.

இந்த வகையில் பின்தங்கிய நிலையிலுள்ள பெருந்தோட்ட மக்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி காத்திரமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.மேலும் தொழிலாளர்களிடையே மாற்றுத் தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தல்கள்  இருந்து வருவதும் தெரிந்த தாகும். இதன் ஒரு அம்சமாக தோட்டப் பகுதிகளில் உள்ள பயிரிடப்படாத காணிகளை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் ஊடாக பொருளாதார மேம்பாட்டிற்கு வித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பயிரிடப்படாத காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்கும் ஒரு நிலை காணப்படுவதாகவும் சிலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையானது தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை முடக்கும் ஒரு செயற்பாடாகுமென்றும் இதனால் பாதக விளைவுகள் பலவும் மேலோங்கும் என்பதால் பயிரிடப்படாத காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்கும் நிலை காணப்படுமாயின் அது உடனடியாக கைவிடப்பட வேண்டுமென்றும் இவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

பெருந்தோட்ட தொழிற்றுறையில் தொடரும் நெருக்கீடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.இத்தொழிற்றுறையின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தாது  அரசாங்கமும் கம்பனியும் பாராமுகத்துடனேயே செயற்படுகின்றன என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.கம்பனியின் பொறுப்பில் தோட்டங்கள் இருப்பதால் தாம் தலையிடத் தேவையில்லை.

தொழிலாளர்களின் நலன்களை கம்பனியே பார்த்துக் கொள்ளட்டும் என்ற போக்கு அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.இது பெருந்தோட்ட மக்கள் “இலங்கையர்”  என்ற பொது வரையறைக்குள் உள்ளீர்க்கப்படுவதை மறுதலிக்கும் ஒரு செயற்பாடாகும் என்றே கருத வேண்டியுள்ளது.

ஒரு அரசாங்கத்துக்கு அதன் கீழுள்ள சகல மக்களின் நலன்களையும் பேண வேண்டிய மிகப் பெரும் பொறுப்புள்ளது.எனினும் காலாகாலமாக மலையக பெருந்தோட்ட மக்களின் நலன்கள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன என்பது கசப்பான உண்மையாகும்.பெருந்தோட்ட மக்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதால் இந்தப் புறக்கணிப்பு தொடர்கின்றதா? என்றும் சிலர் நியாயமான கேள்வியெழுப்பி இருப்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும் என்று கருதுகின்றேன்.

பெருந்தோட்ட மக்கள் மீதான பல்வேறு புறக்கணிப்புகளும்  அவர்களின் ஆணிவேரை அசைத்திருக்கின்றன. இம்மக்களின் இடப்பெயர்வினை அதிகரித்திருக்கின்றன.

தேயிலைத் தொழிற்றுறை மீதான ஒரு விரக்தி நிலைக்கு அம்மக்களை இட்டுச் சென்றுள்ளதோடு அத்தொழிற்றுறையில் இருந்தும் அவர்கள் மாற்றுத் தொழில்களை நாடிச் செல்வதற்கும் வலுசேர்த்திருக்கின்றன.வறுமையின் கோரப்பிடிக்குள் அவர்கள் சிக்கித் தவிப்பதற்கும் அவர்கள் மீதான புறக்கணிப்புக்களே செல்வாக்கு செலுத்தி இருக்கின்றன.

பெருந்தோட்ட மக்கள் பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி வேறெந்த துறைகளிலும் முன்னேறிவிடக் கூடாது என்பது இனவாதிகளின் குறிக்கோளாகும்.இந்த இலக்கை அடைவதற்கு பட்டியல் அடிப்படையில் காலத்துக்கு காலம் காட்சிகள் அரங்கேறுகின்றன.இந்நிலைக்கு எம்மவர்கள் பலிக்கடாவாகி வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

இலங்கையின் பெருந்தோட்ட கட்டமைப்பு மற்றும் தொழிலாளர்களின் வாழ்வு குறித்து புத்திஜீவிகள் பல்வேறு கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.இவற்றுள் கலாநிதி எம்.கணேசமூர்த்தியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.” இலங்கையின் ஒவ்வொரு தோட்டமும் இறுக்கமாக வடிவமைக்கப்பட்ட வழக்காறுகளையும் சம்பிரதாயங்களையும் வரையறைகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது.அதில் வாழ்ந்த நபர்களின் சமூக பொருளாதார அந்தஸ்துப் படிமுறை மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது.

அவ்வந்தஸ்தின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது கடமைகளை மேற்கொள்ளப் பணிக்கப்பட்டதுடன் அப்படிமுறையினை மீற அனுமதிக்கப்படவில்லை.தொழிலாளர்களின் சுதந்திரமான அசைவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

கடனால் பிணைக்கப்பட்டிருந்த நிலைமை, சம்பளங்கள் வழங்கப்பட்ட விதம் , அரசாங்கம் தொழிலாளர் அசைவு தொடர்பாக இயற்றிய சட்ட திட்டங்கள் காரணமாக இலங்கையில் பிணிக்கப்பட்ட ஊழியப்படையொன்று உருவாகியதெனலாம் ” என்கிறார் கலாநிதி கணேசமூர்த்தி. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் முடக்கப்பட்ட வாழ்க்கை முறையில் இன்றும் முன்னேற்றகரமான போக்கு தென்படவில்லை.

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளங்களை வழங்குவதைக் காட்டிலும் கடன்களை வழங்குவதிலேயே மிகுந்த ஆர்வத்துடன்  செயற்பட்டதாக ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.இதன் மூலம் தொழிலாளர்களை வெளிச்செல்லவிடாது குறித்த தோட்டத்திற்குள்ளேயே முடக்கி வைக்க முடியும் என்பது நிர்வாகத்தினரின் எண்ணமாக இருந்தது.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதென்பது நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தேவையற்ற ஒரு நடவடிக்கையாகவே இருந்தது.தொழிலாளர்களின் நலன்களைப் புறந்தள்ளி அவர்களின் உழைப்பை சுரண்டி வயிறு வளர்ப்பதே முதலாளிகளின் எண்ணமாகும்.இந்நிலையில் உச்ச கட்ட இலாபமீட்டல் செயற்பாடுகளுக்கு மத்தியில் தொழிலாளர்கள் நசுங்குண்டு அல்லல்பட்டதையே அவதானிக்க முடிந்தது.

இத்தகைய போக்குகளுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் தொழிலாளர்கள் விழிபிதுங்கும் நிலையே தொடர்ச்சியாக இருந்து வந்தது.இன்னும் கூட இருந்து வருகின்றது.

 விழலுக்கு இறைத்த நீர்

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி சுயதொழில் ஊக்குவிப்பு கடன்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.மாற்றுத் தொழிற்றுறையில் அவர்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தேயிலைத் தொழிற்றுறை இலாபமீட்டும் ஒரு துறையாக எழுச்சி பெற்றுவரும் நிலையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இவையனைத்தும்  “விழலுக்கு இரைத்த நீராக’ இருந்து வருவது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.

இதனிடையே தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாடு கருதி தோட்டப் பகுதிகளில் காணப்படும் பயிரிடப்படாத காணிகளை தொழிலாளர்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளித்து அதனூடாக அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் நாம் நீண்ட காலமாகவே அவதானிக்க முடிகின்றது.பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதற்கு அதிகமாகவே அழுத்தம் கொடுத்து வந்திருக்கின்றார் என்பதையும் மறுப்பதற்கில்லை.எனினும் இது இன்னும் சாத்தியப்படுவதாக இல்லை.

இதேவேளை நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தல்கள் பலவும் இடம்பெற்று வருகின்றன.இலங்கையின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கு பாரிய முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டும்.நாட்டின் தேசிய பாதுகாப்பு போன்று உணவுப் பாதுகாப்பு விடயம் கவனிக்கப்படுவது அவசியமாகும்.உணவுப் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்புத்தான்.

உணவு பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்பட்டால் அது தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும்.உணவுப் பாதுகாப்பு கவனிக்கப்படாவிடின் வீண் குழப்பங்கள், ஸ்திரமற்ற தன்மை, சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையும் அண்மையில் வலியுறுத்தி இருந்தது.இதற்கேற்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

இதிலொரு அம்சமாக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பயிரிடப்படாத காணிகளை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் இத்தகைய பயிரிடப்படாத காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்கும் வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.உணவுப் பாதுகாப்பிற்காக பிரதேச செயலக மட்டத்தில் குழுக்கள்  அமைக்கப்படுகின்றன. அப்பிரதேச செயலக பிரிவில் பயிரிடப்படாதுள்ள காணிகளை இனங்கண்டு அவற்றை தேவையுடையோருக்கு பகிர்ந்தளிப்பதற்கு இக்குழுக்களுக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதன்போது பெருந்தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத காணிகளும் பகிரப்படவுள்ளன.

இந்நிலையில் பெருந்தோட்டக் காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளதாக வேலுகுமார் சந்தேகமெழுப்பியுள்ளதோடு பெருந்தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.இது தொடர்பில் மலையக அரசியல்வாதிகளின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தோட்டப் புறங்களில் வெளியார் தலையீடு என்பது சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல்வேறு தாக்க விளைவுகளுக்கும் அடித்தளமாக அமையும்.ஏற்கனவே இதுபோன்ற பல தழும்புகளையும் மலையகம் சந்தித்திருக்கின்றது. இதனை ஒரு பாடமாகக் கொள்வதோடு வெளியாருக்கு காணி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் எண்ணமுள்ளதாயின் அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.அத்தோடு பெருந்தோட்ட தொழிற்றுறையின் எழுச்சி கருதியும், நாட்டின் தேசிய வருமான மேம்பாடு கருதியும் தன்னையே அர்ப்பணித்து செய்யப்படுபவர்களாக தோட்டத் தொழிலாளர்கள் விளங்குகின்றனர்.

பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் அவர்கள் அல்லல்படும் நிலையில் அவர்களை புறந்தள்ளிவிட்டு வெளியாருக்கு பயிரிடப்படாத காணிகள் வழங்கப்படுமானால் அது மிகப் பெரும் துரோகமாகும்.

இந்நிலையில் தேயிலைக்கே உரமான தொழிலாளர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு வலுசேர்க்கும் வகையில் பயிரிடப்படாத காணிகளை அம்மக்களுக்கே பகிர்ந்தளித்து அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்த அரசாங்கமும், கம்பனியும் முனைதல் வேண்டும்.அதைவிடுத்து வக்கிர எண்ணங்களால் தொடர்ந்தும் பெருந்தோட்ட சமூகம் புறக்கணிக்கப்படுமிடத்து  அதனால் ஏற்படும் தழும்புகள் இலங்கையின் தேகத்தில் ஆழப்பதியும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.