போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்து உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் போலி கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பான வழக்கொன்றுக்கு அமைவாக, நீதவானால் காவல்துறை மா அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்க இது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, சென்னையிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவரின் படத்துக்கு, வேறொரு நபரின் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை உட்படுத்தி விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோசடியாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முறையான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் பொறுப்பேற்று, குறித்த பிரதி கட்டுப்பாட்டாளர் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்குவதற்கு உடந்தையாக இருந்து உதவியமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் வைத்து இன்றைய தினம் (06) குறித்த பிரதி கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பதோடு, இந்த சம்பவம் குறித்து கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



